Friday, November 28, 2014

கதைக்கான இசை




சமீபத்தில் இசையமைப்பாளர்கள் யாரும் பெரியதாக என்னை ஈர்க்கவில்லை, நான் பெரிய இசை மேதையோ இன்றி ஞானம் படைத்தவளோ இல்லை, இருந்தாலும் நல்லதொரு இசையை ரசிக்கப் பிடிக்கும், சமீபத்தில் சிறிதே சிறியதாய் என்னை ஈர்த்தது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, திரும்பவும் சொல்லுகிறேன், இவரது பாடல்கள் அவ்வளவாய் ஈர்க்கவில்லை, ஆனால் பின்னணி இசையில் கலக்குகிறார். மிகவும் ஈர்த்த படம் Undoubtedly  ஜிகர்தண்டா (மதுரைக்காரியான எனக்கு ஜிகர்தான்டாவில் சிறிதும் பிடித்தமில்லை’) ஆனால் படம் கலக்கல்.

அனிருதின் இசை சிலகாலமே என்பதிலும் ஐயமில்லை, விஜய் ரசிகையானநான், கத்தி பாடல்களை கேட்பதை நிறுத்தியாயிற்று, அவரின் இசையில் எனக்கு மிகவும் விருப்பமான பாடல்கள் அனைத்தும் மூன்று படத்திலேயே இருந்தது, பிறகென்னவோ நல்ல இசையை ஆன்றீயாவை கழற்றிவிட்டது போல் கழற்றி விட்டுவிட்டார்! பாடல்கள் அனைத்தும் சென்னை என்னும் ஊரை தூக்கி வைத்து கொண்டாடியும், இல்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஊரும் இல்லாதது போலும் இசை அமைக்கிறார்! என்ன கொடுமை அய்யா இது!!!

தற்பொழுது இவர்கள் இருவரையும் பற்றி அல்ல இப்பதிவு, எனக்கு பிடித்த தேவாவின் மற்றும் ஹாரிஸின் இசைப்பற்றியது,

தேவாவிற்கும் ஹாரீசிர்க்கும் உள்ள ஒரு ஒற்றுமை இருவருமே வெள்ளைக்காரன் பாடல்களை சுட்டு இங்கே தமிழ் சுவைக்கு ஏற்றாற்போல் இசை அமைப்பார்கள் என்பது!

அது நூற்றுக்கு நூறு உண்மை, காப்பி அடிப்பதில் இவர்களை மிஞ்ச இவர்களே மறுபடியும் பிறக்க வேண்டும், அவ்வுளவு அக்கலையில் சிறந்தவர்கள் இவ்விருவரும், அதைக் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இன்றி உடனேயே செய்வார்கள், உதாரணம் சையின் கங்கணம் ஸ்டைல் பாடல் பிரபலமாய் இருந்த பொழுதே வந்த கூகிள் கூகிள் பாடலைச் சொல்லலாம்.

உலகம் முழுவதும் கண்க்னம் பாடல் பேய்த்தனமாக பரவிக்கொண்டிருந்த நிலையில் ஹாரீஸின் இந்தவொரு தைரியத்தை பாராட்ட தான் அந்தோ பரிதாபம் தமிழகத்தில் எவரும் இல்லை!

ஆனால் அது அப்பட்டமானதொரு காப்பி என்று உணர்ந்த பிறகும், அப்பாடலின் இசை நம்மைக் கவரத்தான் செய்தது, உண்மையை சொல்லவேண்டும் என்றால், சையின் கங்க்னம் ஸ்டைல் பாடலை விட இப்பாடல் அருமையாகத்தான் இருந்தது. 

அதே போல் தேவா அவர்களின் தங்க மகன் இன்று – பாட்ஷா படப்பாடலுக்கு நான் ரசிகை, நிஜமாய், அப்பாடலில் ரசினியின் முகத்தை மறந்து விட்டு வேறொரு முகத்தை ஒட்டவைத்து கொஞ்சம் கம்பீரமானதொரு ஆணைக் கற்பனை செய்து பாருங்கள், அப்பொழுது தெரியும் என்ன அருமையான பாடல் அதுவென்று.

என்ன தான் காபியும் டியும் மாறி மாறி போட்டு கொடுத்தாலும், இன்றளவும் தமிழ் படங்களில் கதைகளுக்கு ஏற்றார் போல் இசை அமைப்பதில் இவர்கள் இருவரும் மிகவும் திறமையானவர்களே! துப்பாக்கி + அந்நியன் படப்பாடல்களைச் சொல்லலாம்! அய்யங்காரு வீட்டு அழகே – அழகாய் பொருந்திப் போகும் அப்படத்தின் போக்கில்!! 

திறமையை மிகவும் மதிக்கும் தமிழர்கள், அத்திறமை வேறொரு இடத்திலிருந்து வந்தது என்றறிந்தால், எப்பேர்பட்ட மகானையும் இழிவு படுத்துவார்கள், அவ்வரிசையில். இவர்கள் காப்பி அடிப்பதாலோ என்னவோ, இவர்கள் இருவரும் நிஜமாய் நன்கு இசை அமைத்த பாடல்களுக்கு உரிய மரியாதை தரத்தயங்கியது தமிழுலகம்.
இனி தமிழ் சினிமாவில் மின்னலே பாடகள் போன்று அருமையான பாடல்கள் நிறைந்த படம் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

எல்லாம் அனிருத் போன்றவர்கள் போல், இரண்டு ராப், ரெண்டு புதுமை புகுத்தல்கள் என்பதாகவே எதிர்காலம் அமையப் போகிறது, அப்புதுமைகள் அனைத்தும் சொந்த மூளை இல்லாமல் அடுத்தவன் ஐடியாவை சுடும் typical indian வகை இசையாகவே அமைகிறது. மேற்க்கத்திய தாக்கம் மிக அதிகமாக! உண்மையில் நம் இசையில் தொன்றுதொட்டு வரும் கிராமிய பாடல்களில் புதுமையைப் புகுதுங்களேன், அந்தளவுக்கு திறமை இல்லையா? என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை!!! 

நம்மிடம் இருக்கும் விஷயங்களில் புதுமை செய்யாமல், அயல்நாட்டவனின் அறிவில் புதுமை புகுத்த எல்லோராலும் இயலும்! சிறிதளவு திறமை அத்துறையில் இருந்தால்! காப்பி மட்டும் அடிக்காமல் சொந்த இசைத்திறமையால் முன்னேறி இருந்தால், இவர்கள் இருவரும் தமிழகத்தில் சிறந்த இசை அமைப்பாளர்களுக்கு சவால் விடும் அளவிற்கு திறமை படைத்தவர்கள். 

வாலி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, பாட்ஷா, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற அருமையான இசையைக் கொண்டது தேவாவின் இசை, இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம் என்பது என் வருத்தம்
அதே போல் தான் ஹாரீசும். சிறந்த இசை அமைப்பாளர்கள் சிறப்பாய் இல்லாமல் போனதற்கு அடுத்தவன் மூளையில் குளிர் காய்ந்ததும் ஒரு காரணம்!!!!

இனிவரும் இசை அமைப்பாளர்களாவது புதுமையை ராப் போன்ற பஞ்ச பாடாவதி இசையில் புகுத்தாமல், நம்மிடையே இருக்கும் இசையில், வாழ்க்கை முறையில் இசையையும் அதில் நவீனத்தையும் புகுத்தலாம்! இவர் தான் சிறந்தவர் என்ற அக்கப்போர் இன்றி இணையமாவது அமைதியாய் இருக்கும்!


Saturday, July 6, 2013

நிஜமாய் கிறுக்கல்கள் :)

நீயாய் நானிருக்க ஒரே ஒரு விதிமுறை உனக்கு-என்றேன்டும் வேண்டும் உன் புன்னகை!

ஆவாயோ கணவனாய் தெரியாது- உன் வலியில் வழியில்
மறப்பாயோ என் நெஞ்சார்ந்த முத்தத்தை...

கற்றுக் கொள்கிறேன் கவிதை- உனக்கே உனக்காக
ம், பிடிக்கவில்லையடா- நீ பேசேன் கவிதையாய்

முதுகில் குத்தாதே- குருகுருக்கிறதே
பார்வையை விலக்கிக் கொள்

விரைந்து வா- உனக்காக புன்னகை காத்திருக்கிறது

கலவியோ?  காதலோ? உணர்ந்தேனோ?  அறியேன்!
கவிதையாய் ஒரு முத்தம்- மீண்டும்

வித்தைப் பேச்சு எதற்கு- உன் - போடி லூசில்
நான் மயங்கிட காத்திருக்கையில்

தொலைப்பதற்க்காக பிறந்தேனோ- உன்னில் என்னை

விவரமாய் கேட்கிறாய்- ஏன் காதலித்தாய் என்று
என் சொல்வேன்..
முன் தலையின் ஓரத்தில் கரம் பதித்து கொட்டோன்று வைத்தாய்
அதனால் எனவா?

என் பேச்சின் மரணம் உன் முன் மட்டுமே
மரணம் உனக்கு சொல்லும் விஷயமும் பெண்மை மட்டுமே

எங்கோ தூரத்தில் நீ- நினைவில் இருக்கிறேனா?
தெரியாது!
மணல் போல் ஆனது நம் காதல்- காற்றில் தூசியாய்
உறுத்துவது என்னவோ என் கண்ணோரங்களில் தான்!

Thursday, July 4, 2013

இளவரசன் மரணம்

இது போன்ற சமூக விஷயங்களில் விஷயம் தெரியாமல் பேசக் கூடாது என்பதால் , பொதுவாக நான் இதைக் குறித்து எழுதுவது இல்லை!

ஆனால் காலையில் இருந்து ஏற்கனவே மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு, இளவரசனின் மரணம் அதீத கோபத்தை அளிப்பதாய் தருவதாய் அமைந்துள்ளது!

அவளும் சின்னப் பெண், அவனும் சின்னவனே! இருவரும் காதலித்து, அதனால் அவளின் அப்பா கொலை செய்யப் பட்டு, இன்று காதலனும் கொலையாகி இருக்கிறான்! அவள் கண்டது தான் என்ன? அல்லது அவன் கண்டது தான் என்ன?

இணையத்தில் நாம் பலரும் பேசுகிறோம், எத்தனை நாள்?  இன்னும் ஒரு வாரம்?

ஒரு RIP போட்டு விட்டு நாம் மானாட மயிலாட பார்க்க சென்று விடுவோம். என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்!

ஆனால் மாற்றம்?

அது சமூகத்தின் வேலை அல்லவா??? நம் மனப்பான்மை இது தான், இல்லையா? நாம் தான் சமூகம் என்பதை பலர் உணர்வதே இல்லை!

இங்கே முகப் புத்தகத்தில், ட்விட்டரில் பலரும் அப்பெண்ணை திட்டுகிறார்கள்,  யோக்கியதை இல்லாத ஆண்களே, பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் உங்களுக்கு ஒரு பெண்ணின் கோழைத்தனத்தை குறை சொல்ல அருகதை இல்லை! இங்கே ஒரு லைக் வேண்டும் என்பதற்காக ஊரார் வீட்டுப் பிள்ளையை குறை சொல்லும் விடியா மூஞ்சிகள் உங்கள் வாழ்க்கையை மட்டும் பார்ப்பது நல்லது

இது தற்கொலை என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது! இங்கே யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை! நேற்று அவள் சொன்ன வார்த்தை தாங்காமல் இன்று இவன் செத்துப் போயிருக்கிறான் என்பதற்காக திட்டமிட்டு நடந்த சதி!

 உண்மை எல்லோருக்கும் தெரியும், ஆனால் நியாயம் வாங்கும் வழி எங்களுக்கு தெரியாது!

இணையத்தில் பொங்கும் நம்மில் பலருக்கும் தெருவில் இறங்கி போராடும் தைரியம் இல்லையல்லவா? அங்கே அரசியல்வாதிகள் முன்பு நாம் கேவலமாக தோற்றுப் போகிறோம்!

இன்னும் தோற்கக் போகிறோம்! ஆனால்இளவரசன் கொலையை நிஜத்தில் தடுத்திருக்கலாம்! குறைந்தது இந்த ஒரு மாதமேனும் அவனுடன் யாராவது ஒருவர் இருந்திருக்கலாம்! அங்கே தலித் இயக்கங்களும் தோற்று விட்டன! நம்மைப் போல தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்து சவுண்ட் விடும் நபர்களும் தோற்றுவிட்டோம்!

கண்களில் கண்ணீர்! ஜாதியின் பேயாட்டம் குறைய நல்ல தலைவன் வேண்டும்! நல்ல தலைவன் இல்லாத நாடு நாசமாய் போகும்! தமிழகமும், இந்தியாவும் நாசமாய் போய்க் கொண்டிருக்கிறது! 



Wednesday, July 3, 2013

இரவு - என் முதல் தமிழ் சிறுகதை!



கன்னத்தில் அப்பாவின் இரண்டாவது மனைவி அடித்தது இன்னும் வலித்தது,திரைப்படங்களில் பார்த்த போது சிரிப்பு வந்த, சித்தி கொடுமை இரண்டு வருடங்களுக்கு  முன்பு நிஜமாக கண் முன் வலம்வரத் தொடங்கியது. சித்தி ஒரு நவீன கால ஹிட்லர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம், அப்பாவின் வாய் சமுதாயம் என்கிற போர்வையில் அடங்கிப் போனது, இல்லை தலையணை மந்திரமோ? ஆராய்ச்சி செய்ய மகி விருப்பப்படவில்லை! சினிமாவில் வரும் பாவப்பட்ட பெண்ணைப் போல் அடங்கி போகாமல் இவள் எதிர்ப்பது தான் சித்தியின் இன்றைய கோபத்தின் காரணம். அப்பாவும் வீட்டில் இல்லை, இருந்தால், அடிக்கும் வரை விட மாட்டார், வாக்குவாதம் முற்றி இவளும் பேச வாய் திறந்த போது பொறுக்காத சித்தி தன் கை வண்ணத்தை மகியின் கன்னத்தில் காட்டினாள்!

என்றுமே இல்லாமல், இன்று பார்த்து மழை பேரிடியுடன் பெய்யத் தொடங்கியது!கோபத்துடன் வீட்டில் இருந்து இறங்கி தெருவில் நடக்கத் தொடங்கினாள் மகி!  எங்கே போகிறோம் என்று உணராமல் வெகு தூரம் நடந்த பிறகு தான் சுற்றுப் புறத்தை திரும்பி பார்த்தவளுக்கு மனதில் திகில் சூழ்ந்தது! யாருமே இல்லாத காடு போல் தோற்றமளித்த இந்த இடத்திற்கு எப்படி வந்தோம் என்று யோசித்தாள்,  மனதில் உள்ள கோபம் இவ்வுளவு தூரம் சுயநினைவு சுற்றுப்புறம் மறந்து இழுத்து வந்திருக்கிறது. வழியும் தெரியாமல் எப்படி வீட்டிற்கு செல்வது என்று குழப்பத்தில் நின்ற போது நிஜமாகவே மனதில் பயம் சூழ்ந்தது.

அசைந்த மரங்கள் பேய்களாய் உருவெடுத்துதிகிலடையச்  செய்தன, காற்றுவேறு பலத்த ஓசையுடன் உடலுக்குள் ஊடுருவியது! சாதாரணமாய் ரசிக்கும் மழை இன்றுகுளிருடன் அதீதமான சில்லிப்பை உடலில் புகுத்தியது!

நடுக்கத்துடன் திரும்பி பார்த்த மகி  பயந்தே போனாள், ஒரு உருவம் இவளை நோக்கி வந்து கொண்டிருந்தது, பேய் கதைகளைகேட்டு அநியாயமாய் சிரித்தது தப்போ என்று இப்பொழுது தோன்றியது, நெருங்கி வர வர தான் அது ஒரு ஆண் என்று விளங்கியது, ஒரு வேலை ஆண் பேயோ, ஆனால் கால் இருப்பது போல தோணுதே என்று உற்றுப் பார்த்தாள், மனிதன் தான் என்று உறுதியானதும் பயம் குறையவில்லை,  நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்கள் குறைவா என்ன? ஒரு நடுக்காட்டில் நடுங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை நடுங்க வைக்க....

அருகில் வந்த அவன்,'"  இந்த மழைல இங்க என்ன செய்ற? எதுக்கு இந்த பக்கம் வந்த”  என்றான்

"நா..நான் சும்மா இந்த பக்கம் வந்தேன்" என்றாள் குழப்பத்துடன்..
“என்னது, ச்சும்மா வந்தியா, நாசமா போச்சு, , இது யாரும் இல்லாத அத்துவானம், இங்க வந்து சும்மா வந்தேன், டான்ஸ் ஆடிட்டு வந்தேன்ன்னு சொல்லக்கூடாது, யாரும் இல்லாத இடத்துக்கு  உன்ன தூக்கிட்டு போய்ட்டா என்ன செய்வ?

"இல்ல யோசிக்கல, வேற யோசிசிட்டே வந்தேன், வழிய கவனிக்கல" என்று தடுமாறி உரைத்தாள்

"அது சரி,  நல்லா இருக்கீங்க பொண்ணுங்க, இதுல பசங்கள குறை சொல்லுறது, அவன் பார்த்தான், இவன் கற்பழிச்சான்ன்னு, இப்படி தனியா வந்தா என்ன தான் நடக்காது? என்று கோபத்துடனும் ஒரு வித பதைப்புடனும் பேசியவனின் முகத்தில் ஒரு குத்து விடலாமா என்று தோன்றியது மகிக்கு!

"ஏங்க,ஒரு பொண்ணு தனியா வந்தா உடனே கற்பழிப்பா, அப்போ நாங்க என்ன மனுஷன்களே கிடையாதா, நடக்கக் கூட கூடாதா, ஏதோ யோசிச்சிட்டு இந்த பக்கம் வந்திட்டேன், இந்த லட்சனத்தில தான் உங்க அப்பா அம்மா உங்கள வளர்த்து வச்சி இருக்காங்க" என்றாள் உஷ்ணத்துடன்

“க்கும், எங்க அப்பா அம்மா வளர்க்கிறது இருக்கட்டும், இப்படி பேய் மழையில் தனியா வரலாமா? பேய் பத்தின பயம் எல்லாம் இல்லையா? என்று சிரிப்புடன் கேட்டான்

அதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்,” ஏன் சிரிக்கிற? என்று யோசனையுடன் கேட்டவனிடம்

“பேயா?!  சார், இங்க அறிவியல் உலகத்தில பேய் கூட இருக்க முடியமா என்ன, இப்படி நல்லா ஓங்கு தாங்கா இருக்கீங்க, சின்ன புள்ள மாதிரி பேய பத்தி பேசுறீங்க” என்று மேலும் சிரித்தாள்

அவனின் உருவத்தையும், அவனின் பேய் நம்பிக்கையையும் பார்த்து அவளுக்கு மேலும் மேலும் சிரிப்பு பொங்கியது. நல்ல வேல, நம்ம பொண்ணா இருந்தாலும் இவனை விட தைரியமா தான் இருக்கோம் என்று தனக்கே ஷெட்டு கொடுத்துக் கொண்டாள்

அவனிடம் ஒரு நிமிடம் பதில் இல்லை

“பேய் பத்தின பயம் வேணும்ன்னா இல்லாம இருக்கலாம், ஆனா மனித பேய்களைப் பத்தி உன் வயசு பொண்ணுங்க தனியா வரும் போது கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும், இனிமே இப்படி வராத, இன்னைக்கு நான் வந்த மாதிரி யாரும் வர மாட்டாங்க, ஆபத்து வரலாம்”
சிரிப்பாய் வந்தாலும், நம் நன்மைக்காக தானே சொல்கிறான் என்று நினைத்து.” சரி சார், இனிமே இப்படி வரல” என்றாள்

பலத்த மழை என்பதால், நடக்கும் வழியில் தெரு விளக்கு கூட இல்லை, எங்கும் இருட்டாகவே இருந்தது, அருகில் நிற்பவனின் உருவம் தெரிந்ததே தவிர முகம் தெரியவில்லை.  உதவி செய்பவனின் முகம் பார்க்க வேண்டும் போல் தோன்றியது!

இவள் பேசினால் மட்டுமே அவன் பேசினான், மற்றபடி நடைபயணம் மௌனமாகவே தொடர்ந்தது, தூரத்தில் ஒரு தெருவின் விளக்கு எரிந்தது!

“இங்க இருந்து நீ போய்டுவ இல்லையா, அங்க வெளிச்சம் தெரியுது பாரு, அங்க இருந்து வழி உங்க வீட்டுக்கு தெரியும் தான, இதுக்கு மேல நான் வர முடியாது” என்றான்

“ஏன் சார், உங்க வீட்டுக்கு நீங்க போக வேண்டாமா? நீங்க எந்த ஏரியால இருக்கீங்க, அப்பா வந்திருப்பாரு சார், வீட்டுக்கு வாங்க, ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்” என்றாள்

“நிஜத்தில் அடி வாங்கி கோபத்தில் வீட்டின் வெளியே ஓடி வந்ததால், இவனை உடன் அழைத்து சென்றால்,வரவேற்பு எப்படி இருக்கும் என்று அவளுக்கு தோன்ற தான் செய்தது, ஆனால் அப்பா வீட்டிற்கு வந்திருப்பார் என்பதால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அழைத்தாள்.

“இல்ல மகாலட்சுமி, நான் இனிமே உன் கூட வர முடியாது, என் நண்பர்கள் என்ன தேடுவாங்க, அவங்க உன்ன தேடி வரக் கூடதின்னு தான் நான் உன் கூட வந்தேன்” என்றவன் குரலில் சோகம் இருந்தது

“அவங்க ஏன் சார், என்ன தேடனும், சரி சார், அடுத்த முறை கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, கற்பூரம் நகர், வீட்டின் முன்ன பிள்ளையார் சிலை இருக்கும், சின்னதா” என்றவளை ஒரு நிமிடம் ஆழப் பார்த்து விட்டு

“சரி வரேன், ஆனா நீ இப்போ சீக்கிரமா வீட்டுக்கு போ, நீ வீட்டுக்கு போனால் தான் நான் நிம்மதியா போக முடியும், சீக்கிரம் போ” என்று துரத்தினான்

“சரி சார், போயிட்டு வரேன், என்று திரும்பியவள்..ஏதோ யோசனையில் மெல்லவே தான் நடந்தாள்,”மகி என்று அவன் அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தவளிடம்

“என் பெயர் என்னன்னு நீ கேட்கவே இல்லையே? என்றான் குரலில் ஒரு பேதத்துடன்

தன்னையே ஒரு முறை திட்டுக் கொண்டு “சாரி, உங்க பேர் என்ன? என்றவளிடம்

“என் பேர் நந்தன், எப்போதும் மறந்திராத” என்று மட்டும் சொல்லி விட்டு விறு விறுவென்று இருட்டில் சென்று மறைந்து விட்டான்

யோசனையுடன் மெல்ல நடந்த மகிக்கு என்னமோ செய்தது, இவ்வுளவு தூரம் வந்து பேசிய இளைஞனிடம் ஏதோ ஒன்று அவளை இழுத்தது, மேலும் அவளை அவன் பெயர் சொல்லி அழைத்தது வேறு குழப்பியது, ஒரு வேலை அப்பாவிற்கு தெரிந்தவனாய் இருப்பானோ, அதனால் தான் என் பெயர் தெரிந்திருக்குமோ என்று மனம் குழம்பியது! 

அடுத்து அவனை எப்போது பார்க்க போகிறோமோ என்று யோசனை தோன்றி ஒரு வித குழப்பத்திலேயே வீட்டிற்குள் சென்றாள்.
வாசலில் காலடி எடுத்து வைக்கும் போதே, சித்தி அப்பாவிடம் பேசியது கேட்டது,” உங்க பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க, அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போகாது, ஏற்கனவே ஒரு பையன் கேட்டு வந்தான், உங்க பொண்ணு நேரம், கேட்டு வந்த இரண்டு நாள்லயே அவனும் விபத்துல போய்ட்டான், என்னத்த சொல்ல” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்

மெளனமாக வீட்டிற்குள் சென்று தன் அறைக் கதவை அடைத்ததாள் மகி, என்னவோ குழப்பமாகவே இருந்தது.அன்றைய இரவு உறக்கம் இன்றி நகர்ந்தது! 

மறுநாள் ஞாயிறு என்பதால் அப்பா வீட்டில் இருந்தார், சித்தி கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி சென்றிருந்ததால், அப்பாவும் மகளும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

மெதுவாக அவரிடம் சென்று,” அப்பா, என்ன பொண்ணு கேட்டு ஒரு பையன் வந்திருந்தான்ன்னு நேத்து சித்தி பேசிட்டு இருந்தாங்களே, யாருப்பா அது” என்றாள்

சிறிது நேரம் யோசித்து விட்டு,” அது ஒன்னும் இல்லமா, ரெம்ப நாள் முன்னாடி நடந்தது, இப்போ அது பற்றி என்ன” என்றார்
“இல்ல பா, தயவு செஞ்சு சொல்லுங்க, அந்த பையனுக்கு என்ன ஆச்சு? என்று ஒரு பதைபதைப்புடன் கேட்டாள்.

ஒரு முடிவுக்கு வந்தவர் போல,” உன்ன ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி  ஒரு பையன் பொண்ணு கேட்டு வந்தான் டா, பார்க்க அழகா இருந்தான், இங்க தான் ரெண்டு தெரு தள்ளி வீடு, ஒரு மூணு கிலோமீட்டர் தள்ளி சிமென்ட் ஆலை இருக்கே, அதுல அவன் சிவில் எஞ்சினியர்ரா இருந்தான், நானும் உனக்கு இங்க இருந்து விடுதலையா இருக்குமேன்னு சரின்னு சொல்லிட்டேன், ஆனா ஒரு மழை நாளில் நைட் இன்ஸ்பேக்ஷனின் போது கால் தடுமாறி எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்திட்டான், நான் கூட கடைசி காரியத்துக்கு போய்ட்டு வந்தேன், அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன், உன்ன ஒரு வருஷமா காதலிச்சதா சொன்னான், அவங்க அப்பா அம்மா கிட்டயும் சம்மதம் வாங்கிட்டதாகவும், முதலில் என் சம்மதம் கிடைச்சதும், அவங்க வந்து பேசுவாங்கன்னும் சொன்னான், அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு, அதான்டா உன் சித்தி காரி நேத்து பேசிட்டு இருந்தா, நான் உன் கிட்ட சொல்லாமலே மறைச்சு வச்சிடலாம்ன்னு தான் நினைச்சேன்,நேத்து அவ பேசி உன் காதில் விழுக வச்சிட்டா,நீ இத பத்தி எல்லாம் யோசிக்காத மகி, அவங்கவங்க விதி, யார விட்டது, நீ போய் ரெஸ்ட் எடு” என்றார்

மெல்ல எழுத்து தன் அறைக்கு செல்லும் முன் திரும்பி,” அப்பா, அந்த பையனோட பேர் என்ன? என்றாள்

“அவன் பேரு நந்தன் டா, அத பத்தி யோசிக்காத மகி, கஷ்டமா இருக்கும், ஏதாவது டிவில படம் போட்டு பாரு என்றவர், தானே டிவியை ஆன் செய்து பார்க்கலானார்

தன் தனியறையில் சென்று அமர்ந்த மகிக்கு ஒன்று மட்டும் புரிந்தது, இன்று மறுபடியும் அந்த சிமென்ட் ஆலைக்கு தான் செல்வோம் என்று.......................

Thursday, May 23, 2013

காலம் மாற்றி விடும் வலியை

காதலில் தோல்வியுற்ற பெண்கள் பல மாதங்களுக்கு பைத்தியம் போல இருப்பார்கள், பல காலம் ஹாஸ்டலில் இருந்ததால், இவ்வாறு அடி வாங்கிய பெண்கள் நடை பிணம் போல் இருப்பதை பார்த்திருக்கிறேன்....
ஆனால், பெரும்பாலும் அவர்கள் உணராதது இந்த கடின மன வலி காலப் போக்கில் குறையும் என்பது தான், ஒரு நாள் இதே போல் காதலில் தோல்வி அடைந்த ஒரு தோழிக்கு ஆறுதல் சொல்ல நேர்ந்தது, மிகவும் நல்ல பெண், அழகாகவும் இருப்பாள், டெல்லியை சேர்ந்தவள், ஆனால் அழகிலோ, அறிவிலோ கொஞ்சம் கூட கர்வமில்லாமல் சிரித்துக் கொண்டே பேசும் குணம் உடையவள்
இரண்டு மாதம் நன்கு பழகிய பிறகு கேட்டு அறிந்தது, காதலித்த பையன் இவளுடன் பழகிக் கொண்டே வேறு ஒரு பெண்ணிடமும் உறவாடிக் கொண்டிருந்தது, இவளுக்கு தெரியாமலே, அந்த பெண்ணை சந்தித்தது என்று.... கடைசியில் உண்மை ஒரு தோழியின் மூலமாக தெரிந்து இவள் நொந்து நூடில்ஸ் ஆனது தான் மிச்சம். அவளிடம் ஆறுதல் என்று நான் எதுவுமே சொல்லவில்லை
கொஞ்ச நாட்கள் பொறுத்திரு- என்று மட்டும் சொன்னேன், ஆனால் இல்ல இந்த துரோகத்த மறக்கவே முடியாது ப்ரதி என்று பலவாறு புலம்பினாள். ஒரு ஆறு மாதம் கழித்து இதைப் பற்றி உன்னுடன் பேசுகிறேன் என்று விட்டு அமைதியாகி விட்டேன்
ஹைதராபாத் விட்டு வர நேர்ந்தது, பல மாதங்கள் தொலைபேசி தொடர்பே இல்லை, ஜனவரி மாதம் ஒரு நாள் கால் செய்தாள், என்னவென்று கேட்டால், கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு, ஆனா டெல்லில , நீ கண்டிப்பா வரணும்ன்னு....
 உனக்கு சந்தோஷமா என்றேன், ரெம்ப பிடிச்சிருக்கு பையன, நல்ல வேல அவன் கிட்ட இருந்து தப்பிசிட்டேன் ப்ரதி, அவன கல்யாணம் பண்ணியிருந்தா, என்ன விட்டு வேற பொண்ண அப்போவும் பார்த்திருப்பான், இப்போ தான் நிம்மதியா இருக்கு என்றாள்!
அதனால், நொந்து நூடில்ஸ் ஆகி கண்ணீர் விடும் பெண்கள் ஆறு மாதம் பொறுத்திருங்கள்! காலம் மாற்றி விடும் வலியை....

Saturday, May 11, 2013

கற்பகசுமதி

கற்பகசுமதி

என் தோழி கற்பகசுமதி, ரெம்பவும் நெருங்கிய சிநேகிதி இல்லை, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பழக்கம்! என் அம்மாவுடன் ஆபிசில் வேலை செய்பவரின் பெண்! ரெண்டுபெரும் +2ல மதிப்பெண்கள் குறைவு. அதனால் அலைந்து திரிந்து மதுரையில் இருக்கும் அப்பொழுது பலருக்கும் தெரியாத கல்லூரியில் இடம் கிடைத்தது!

அதிலும் நான் எடுத்த மார்கிற்கு நான் பி காம் படிக்க மாட்டேன், பி பி ஏ தான் படிப்பேன் என்று நான் செய்த பிடிவாதம் வேறு! அவளும் அதே போல் தான், கற்பகசுமதி, ஆனால் என்னைவிட மதிப்பெண் அதிகம் !
இருவரின் மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் ஒன்றாகவே கல்லூரியில் கொடுத்து இருவருக்கும் ஒன்றாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது! பி பி ஏவிற்கு!
மிகவும் சந்தோஷமாக கல்லூரியில் சேர்ந்தேன்! பலரைப் போலவே.  கல்லூரி என்பது கனா காணும் காலம், சினிமாவிற்கு சென்று பாடத்தை குறைப்பதே கல்லூரி வாழ்க்கையின் நிஜம் என்று நானும் போலியாக நம்பியிருந்தேன்! நான் நிஜமென்று நினைத்தது சுத்த மடமை என சிறிது நாட்களிலேயே காலம் உணர்த்தியது! :-)

பள்ளிக்கூடத்தை விட மோசம்! தினமும் ஒரு டெஸ்ட், அதில் நல்ல மார்க் எடுக்காவிட்டால் நன்கு திட்டு விழும்! திட்டு, அறிவுரை  எல்லாம் இப்பொழுது போலவே அப்பொழுதும் எனக்கு வேப்பங்காய் தான்! பள்ளியிலேயே குட்டிச்சுவற்றில் ஏறிக் குதித்து முரளி நடித்த மனுநீதி படத்திற்கு துணிவாக சென்ற ஆள் நான், எனக்கெப்படி இந்த கல்லூரி பிடிக்கும்?,கல்லூரி வாழ்க்கையின் பால் நான் கொண்டிருந்த கனவு சுக்குநூறாக உடைந்து தெறித்தது!

ஆனால் என்னைப் போல் சுமதி எதற்கும் அலட்டிக் கொண்டதில்லை, அமைதியாக வருவாள், சுற்றுப்புறத்தை அருமையாக தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளத் தெரிந்த அருமையான பெண்! எதற்கும் கலங்கும் மனமும் கிடையாது, எல்லாவற்றையும் ஒரு புன்னகையில் சமாளிக்கும் திறமை, சில சமயங்களில் அதிகம் உணர்ச்சிவசப் படும் எனக்கு பொறாமையாகக் கூட இருக்கும்!

அவ்வுளவு தான், அதற்கு மேல், அவளிடம் பெரிதாக பேசியதில்லை, சேர்ந்தவுடன் அவள் ஒரு பெண்கள் அணியிலும், நான் வேறு ஒரு பெண்ணுடனும் நட்பு வைத்துக் கொண்டோம்! நன்றாகவே சென்றது வாழ்க்கை ! எங்கள் ஹெச் ஒ டி அமுதா மேம் அவர்களுக்கு பிடித்த மாணவியானேன்! நிஜமாகவே இன்றுவரை புரியாத புதிர், ஏனென்றால், தற்போது இருக்கும் என்னை விட பல மடங்கு கோபக்காரியாகவும் எடுத்தெறிந்து பேசுபவளாகவும் இருந்தேன்(இப்போ மட்டும் நீ கொரச்சலாவா பேசுற)ன்னு நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது! இதை விட மோசம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்!

நட்பு பெரியதாக இல்லாவிட்டாலும், பார்த்தால் ஒரு புன்னகை, ஒரு நல விசாரிப்பு என்று அன்பாக இருப்பாள், இதற்கிடையில் இப்பொழுது என் காவலனாகவும், பல சமயங்களில் எதிரியாகவும் இருக்கும் ஆங்கிலம் அப்பொழுதும் எதிரியாகவே இருந்தது, எங்கள் வகுப்பில் படித்த வாடிப்பட்டி, வடுகப்பட்டி பெண்களுக்கு ஆங்கிலம் அதிகம் கலக்கி பேசும் என்னைப் பிடிக்காமல் போய் விட்டது, அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை, ஏனென்றால் ட்விட்டரில் இப்பொழுதும் பலர் ஆங்கிலத்தை நான் ஒரு பந்தாவிற்காக பேசுவதாய் நினைக்கிறார்கள்!

நிஜமாய் சொல்ல வேண்டுமானால், எங்கள் பெங்களுரு கல்லூரி ஹாஸ்டல் அறை துடைக்கும் ஆயா என்னை விடஅழகாக ஆங்கிலம் பேசும்! ஆனால் இந்த நியாயத்தை புரியவைக்க என்னால் முடியவில்லை,

என்னையறியாமேலே என் ஆங்கிலப் புலமையால்(!!!!) எனக்கு பல  எனிமிகள் உருவாகிப் போனார்கள்! கூடிக்கூடி நம்மை பற்றி புரணி பேசுவது, நாம் கடந்து போகும் போது கிண்டல் செய்வது எனக் கொடுமை செய்தார்கள், வேறொரு பெண்ணென்றால் நிஜத்தில் உடைந்து போயிருக்க வாய்ப்பிருக்கிறது!

இந்த கிறுக்குப் பெண்களை சமாளிப்பதை கவனத்தில் கொண்ட நான், சுமதி வீட்டில் என்ன நடக்கிறதேன்பதை உணரவில்லை! எனக்கும் அக்கல்லூரியில் படிப்பதில் துளியும் இஷ்டமில்லை!

இப்படி சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், தெர்மோகோளை வைத்து ஒரு வித்தியாசமான டிசைன் செய்யச் சொன்னார்கள்! எனக்கு இந்த பைன் ஆர்ட்ஸ் எதுவுமே சிறுவயதில் இருந்து கை வந்ததில்லை, அதனால் நானே சுமதியின் துணையை நாடினேன்! வழக்கம் போல் ஒரு புன்னகையுடன் என்னுடன் சேர்ந்து அந்த டிசைன்னை செய்ய ஒப்புக் கொண்டாள்! எனக்கு  மகா சந்தோசம்!

இந்த வேலையில் ஒரு மூன்று நாட்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம் சுமதியும் நானும்! அழகாய் ஒரு குறை கூட சொல்ல முடியாத அளவில், என் சிறு சிறு உதவியினுடே செய்து முடித்தாள்! பெரியார் பேருந்து நிலையத்தில் ஒரு நாள், ஏழு மணியளவில் நிலக்கடலை வாங்கிக் கொடுத்தாள், சாப்பிட்டு அவளை பஸ் ஏற்றி அனுப்பியது இன்றும் நியாபகம் இருக்கிறது!

மறுநாள், கடைசி டிசைன் வேலையை முடிக்க வீட்டுக்கு வந்திருந்தாள்,  அப்பொழுது தான் அஜித் நடித்த வில்லன் படம் வெளிவந்திருந்தது, எனக்கு படம் பார்க்க மிகவும் ஆசை, ஆனால் சுமதிக்கோ என்னை போல் தனியாக தியேட்டர்ருக்குச் சென்றுப் பழக்கமில்லை! தயங்கியவளை கட்டாயப் படுத்தி இழுத்துச் சென்றேன்! நாங்கள் செல்லும் முன் இருபது நிமிட படம் முடிந்துவிட்டது!
இருந்தாலும் இருவரும் தனியாகச் சென்று படம் பார்த்த மகிழ்ச்சியில் இருந்ததால் படம் நன்றாகவே இருந்ததாக பட்டது எங்களுக்கு! மறுபடியும் அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்றேன்!

அதன் பிறகு என் படிப்பு, முதலியவற்றில் கவனமாய் இருந்ததால், அவள் குறித்து யோசித்ததில்லை, அவளும் முதலில் இருந்தது போலவே சிறு புன்னகையுடன் வளைய வந்தாள்

இதற்கிடையில் இந்த கல்லூரி பள்ளியை விட மோசம், எனக்கு மாப்பிள்ளை பாருங்கள் . இல்லாவிட்டால் வேறு கல்லூரியில் சேர்த்து விடுங்கள் அதுவும் இல்லைன்னா, படிப்பை நிறுத்துங்கள் என்று நான் வீட்டில் அடம் பிடிக்கத்தொடங்கினேன், ஆனால் அவளும் கல்லூரியில் இருந்து வீட்டுச்சூழலுக்காக விலகுவதாக இருந்தாள் என்பது தெரியாது, இரண்டாவது செமெஸ்டர் முடிக்கும் தருவாயில் ஏன் கல்லூரியில் இருந்து விலகுகிறாய்  வருந்தி கேட்ட எங்கள் அமுதா மேம்மிடம் வீட்டு நிதி நிலைமை சரியில்லை, அதனால் படிப்பை நிறுத்தகிறேன் என்று எல்லோர் முன்பும் சிரித்துக் கொண்டே சொன்னாள்!

எனக்குக் கூட, படிப்பை நிறுத்துவதைப் பற்றி இவ்வளவு சுலபமாக சொல்கிறாளே, நாளை படிக்காவிட்டால் இதே நிதி நிலைமை இவளுக்கும் வருமே என்று யோசித்தது இன்றும் நியாபகம் இருக்கிறது!

எனக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தது, சுமதி அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பிரவுசிங் சென்டரில் வேலை செய்யத் தொடங்கினாள்! அவளைப் பற்றி யோசிக்கக் கூட நேரமில்லாமல், என் எம் பி ஏ , என் கனவுகள் என நாட்கள் கடந்து  சென்றது!

இதற்கிடையில் எம் பி ஏ படிக்க நான் பெங்களூருக்கு சென்று என் படிப்பை தொடர்ந்த காலம் , அம்மா தொடர்ந்து சுமதியைப் பற்றி பேசுவார்கள், அருமையான பெண், அவளின் முதலாளி, இப்பெண்ணின் குணத்தைப் பார்த்து இவளின் குடும்ப சூழ்நிலை உணர்ந்து பல உதவிகள் செய்வதாக சொல்வார்கள்! எனக்கு சந்தோஷமாக இருக்கும், தான் செய்யும் வேலையில் சிறப்பாக இருக்கிறாளே என்று!

சிறுவயதில் இருந்து நோய், மஞ்சள் காமாலை போல் அவ்வபோது வந்திருக்கும் போல, பிட்ஸ் வேறு! சிறு சிறு சிகிச்சைகள் செய்து இருக்கிறார்கள், பெரியதாக எதுவும் இருப்பதாக டாக்டரும் சொல்லவில்லை! ஆனால் திடீரென்று ஒரு நாள் இரண்டு கிட்னியும் இயங்கவில்லை, கண் போகும் வாய்ப்பு அதிகம், பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று சொல்லிவிட்டார்கள்

ஏற்கனவே கடனில்இருக்கும் அப்பா என்ன செய்வார், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் அம்மா, படுக்கையில் விழும் வரை, அதாவது கண் பார்வை முழுவதும் மங்கும் வரை வேலை செய்தாள் அந்த பெண் என்றாள் நம்புவீர்களா?

நான் வாழ்கைய தைரியமா எதிர்கொள்வேன், சாவைப் பற்றி பயம் இல்ல, சாவு என்னப்பார்த்து பயப்படணும்" என்று கண் போன பின்பு ஒருநாள் சொன்னாளாம்!

நான் மதுரைக்கு அடிக்கடி வந்தும் அவளைச் சென்றுப்பார்க்க வில்லை! மனது இடம் கொடுக்கவில்லை! என் நியாபகத்தில் எனக்கு கடலை வாங்கி கொடுத்த சிரித்த முகக்காரி இருக்கவேண்டுமென விரும்பினேன்
கணேஷன் அங்கிள் மனதில் கூட இருந்திருக்கும், கூட படித்த பெண் ஒரு முறை வந்து பார்த்திருக்கலாமே என்று! மனம் வரவில்லை!

அன்று ஒரு நாள், வேலையில் சேர்ந்த புதிது, பெங்களூரில் இருந்து மதுரை வந்திருந்தேன், சுமதி இறந்து விட்டதாக தகவல் வந்தது!
அம்மாவிடம் வரவா அம்மா என்றேன்!..... என் அம்மா யோசித்துவிட்டு "வேண்டாம் அவள இப்போ பார்த்தா உன்னால தாங்க முடியாது" என்றுவிட்டு தனியாகவே சென்றார்!

இதில் கொடுமை என்னவென்றால், பணத்தை எல்லாம் மகள் வைத்தியத்திற்கு செலவழித்துவிட்டு, சுமதியின் பெற்றோரிடம்  அவளின் இறுதி காரியத்திற்கு பணமே சுத்தமாக இல்லை!  அம்மா வேகமாக சென்று அவர்களால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள்
ஆனால் அம்மாவிற்கு முன்பே, அவள் வேலை செய்த ப்ரோசிங் சென்டர் முதலாளி பணம் கொடுத்து இறுதி காரியம் அனைத்தையும் கவனித்துக் கொண்டதாக அம்மா என்னிடம் புலம்பினார்கள்

"அப்படி அழுதார்டி சுமதி முதலாளி, என் பொண்ணு மாதிரி மா, அம்மா அப்பாவிற்கு கஷ்டம் கொடுக்க கூடாதின்னு அப்படி உழைக்கும் இந்த பொண்ணு, வேலையில ஒரு குறை சொல்லமுடியாது, உயிரோட இருந்திருந்தா கல்யாணம் காட்சி பார்த்திருக்கலாமே, ஆண்டவன் நல்ல திறமை, அழகு, பொறுமை எல்லாம் கொடுத்தான், ஆயுள மட்டும் கொடுக்கலையேன்னு" அழுதார் அம்முன்னு சொன்ன என் அம்மாவின் கண்களிலும் கண்ணீர்

சமீபத்தில் வில்லன் படம் டிவியில் ஒளிபரப்பினார்கள், சுமதியும் நானும் மிகத் தாமதமாக தியேட்டர்ரில் நுழைந்தது என் கண் முன்னே நிழல்படமாக ஓடியது

ஆனால் இன்றளவும் என் மனதில் சிரித்த முகமாக, கவலை படாத ப்ரதிபா, அழகா டிசைன்ன முடிச்சிடலாம் என்று சொன்ன பெண்ணே வியாபித்திருக்கிறாள்!

Thursday, April 18, 2013

சோக உப்பு :-))

அவர் என்னுடைய கேப் நண்பர், அதாவது என்னுடன் காரில் தினமும் அலுவலகம் செல்லும் ஒரு சக பயணி- உடன் பணியாற்றுபவர்!

தினமும் ஏதாவது பேசியபடியே செல்லுவது என் வழக்கம், காரில் யாரேனும் அமைதியாய் இருந்தால் எனக்குத் தாங்காது, உடனே, அவர்களிடம் ஏதாவது பேசி வம்பிழுத்து கலகலப்பாக்கி விட்டு தான் வேறு வேலை எனக்கு!

அன்றும் அப்படி தான், அந்த நண்பர் கொஞ்சம் சோகமாக முகத்தை வைத்திருந்தார், என்ன சார், ஏன் இவ்வுளவு அமைதியா வர்றீங்கன்னு கேட்டேன்

அதுக்கு அவர் புலம்பியது இது தான்," அட நீங்க வேற ப்ரதிபா, வீட்ல இம்சை தாங்கல, முந்தி எல்லாம், அம்மா சமைப்பாங்க, பெரும்பாலும் நல்லா தான் செய்வாங்க, ஆனா என் மேல ஏதாவது கோபம் இருந்திச்சின்னா, சாம்பார்ல ஒரே உப்பு தான், அத அவங்களும் தான் சாப்பிடணும்ன்னு நினைக்க மாட்டாங்க.

அப்புறம் வீட்ல உட்கார்ந்து டிவி பார்க்க முடியாது
வேணும்ன்னே பாத்திரம் பலமா உடையும், ஒரே சத்தமா இருக்கும்.

அதுனாலேயே நான் பொதுவா வீட்ல அமைதியா போய்டுறது, ஆனா இப்போ பாருங்க, அப்படியே என் அம்மாவ பார்த்து என் பொண்டாட்டியும் அதையே செய்றா! நேத்து நைட் சம்பாத்தி குருமால பயங்கர உப்பு...

என்னத்த சொல்ல என்று ... புலம்பிக் கொண்டே வந்தார்.... எனக்கு ஒரு பக்கம் அநியாயமாய் சிரிப்பு வேறு, ஆனாலும் கஷ்டப் பட்டு சிரிப்ப வெளிகாட்டாம நல்ல புள்ளையா உட்கார்ந்திருந்தேன்!

மதுர பொண்ணு