Monday, February 4, 2013

முதல் சுஜாதா புத்தகம்.....



பொதுவாய் எனக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் புரியாது - ஒன்று கார்ட்டூன் - இரண்டு- கவிதை.
பெருமையாகச் சொல்லவில்லை, இதற்காக வருத்தப்பட்டதுண்டு! ஊர் உலகத்தில் அத்தனை பிள்ளைகளும் கார்ட்டூனில் லயிக்கும் பொழுது, அந்த கர்மம்(மன்னிக்கவும்) பிடித்தது எனக்கு என்றுமே புரிந்ததில்லை.

பத்து வயதிலேயே ரிக்கி மார்டின் பாடல்கள் தான் பிடித்தது! எந்த புத்தகத்தை எடுத்தாலும் கவிதை பகுதியை நான் படிப்பதில்லை, இதற்கும் வருத்தம் தான்- ஊரே, உலகமே கவிதை எழுதுகிறது, எனக்கு மட்டும் இது புலப்படவில்லையே என்று....

இந்த கவலையில், நான் பதினான்கு வயதில் ஒரு கவிதை(!!!) எழுதினேன். 

பாரதி சொன்னான், காதல் போயின் சாதல் என்று
என்னால் சாக முடியவில்லை, என் காதலும் பொய்யில்லை
உயிர் இருந்தும் பிணமாய், உடல் இருந்தும் பூமிக்கு சுமையாய்
வாழ்வேனே தவிர சாக மாட்டேன்
நீ வருந்துவாய் என்பதற்காக.....

இந்த கவிதை, என்னுடன் படித்த சிறுமிகளுக்கு எவ்வாறு புரிந்ததோ தெரியவில்லை, "ஏய், சூப்பரா இருக்கு டி, யாரையும் லவ் பண்ணுறியா" என்று உயிரை வாங்கி விட்டார்கள்....


அப்பொழுது தான் புரிந்தது, காதல் கவிதை எழுத, காதலிக்க வேண்டாம் என்று. சரி, போனால் போகட்டும் என்று கவிதை எழுதுவதில் முனைந்தேன், அந்த வயதில் என்ன புரிந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம், முழுவதும் காதல் கவிதைகள்...


இது ஒருநாள் வசமாக என் மாமாவிடம் மாட்ட (என்னை ஐ ஏ எஸ் படிக்கச் சொல்லி உயிரை வாங்கிய நல்ல மாமா) இந்த வயதில் காதல் கவிதையா என்று பாதியை கிழித்துப் போட்டார், மீதி தீக்கு இரையாகியது.

சிறு பிள்ளை என்றாலும், என் எழுத்தை அவமதித்த அவர் மீது எனக்கு துவேஷமும், கோபமும் அதிகமாய், அன்று எனக்கு நானே செய்து கொண்ட சபதம்- இனி எக்காலத்திலும் எழுதுவதில்லை என்று....
அந்த ரோஷத்தை என் இருபது வயதுவரை காப்பாற்றியும் வந்தேன்! ருசி கண்ட பூனைப் போல் தான் எழுத்தும், விடாது கருப்பாக என்னை துரத்தியது...

சரியென்று சின்ன சின்ன கதைகள் என்று மீண்டும் எழுத்துப் பயணம்! வேலையென்று பார்க்க வந்தவுடன் முழுவதுமாக ப்ளாக்கில் என் கவனம் திரும்பியது!!!


முதலில் எம் பி ஏ படித்த திமிரில் முழுவதும் ஷேர் மார்க்கெட், சி என் பி சி சேனல், செரீன் பான் பற்றி, உதயன் முகர்ஜி பற்றி என்று வெற்றுப் பத்திரமே..வேலையில் எழுந்த விரக்தியில் அந்த வகை எழுத்து காலப் போக்கில் போர் அடிக்க தொடங்கியது! ஒரு வாசகர் கூட இல்லாத வருத்தமும் கூட...

என் அனுபவங்களை முதன்மையாக வைத்து நான் தொடங்கிய ப்ளாக்கிற்கும் ஆங்கிலத்தில் இருந்ததால் மிகவும் கஷ்டப் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தான் வாசகர் வட்டம் பெருகியது! 

Writing is an obsession, it never leaves you until you write or die- இதை நான் உணர்ந்து கொண்டேன்...

நான் படித்த பெரும்பாலும்  புத்தகங்கள் லீடர்ஷிப், ஊக்கம், முன்னேற்றம் குறித்தவை, அவைகளில் வாழ்க்கைகுறித்து இருக்குமே தவிர, அறிவை வளர்க்க நாம் வேறு விதமான புத்தகங்கள் தான் படிக்க வேண்டும் என்று சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன்.

அப்படி கவிதையே பிடிக்காத எனக்கு முதலில் வாசிக்க தூண்டியது எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் அவர்கள் எழுதிய தேவதை புராணம், எதார்த்தமாக ட்விட்டர்ரில் பார்த்து படித்து வியந்தேன்! 

முதலில் எனக்கு அந்த கவிதை புரிந்தது, அடுத்து அதில் இருப்பதைப் போல் நடப்பதை கற்பனை செய்ய முடிந்தது!

புரியாமல் எழுதி, எல்லோரையும் குழப்பி, பெரிய எழுத்தாளர் என்று பெயர் வாங்குவதை விட , சாதாரண நடையில் எழுதி, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட தமிழ் அகராதியை தேடி ஓட வைத்த இவரது கவிதைகள் அருமை.

இனி எழுத்தாளர் சுஜாதாவிற்கு வருவோம்! இவரைப் பற்றி தெரியும்! முதன்முதலில் எனக்கு சுஜாதா அறிமுகமானது, இரண்டாவது காதல் கதை என்கிற அவரது நாவலில், இதை ஏதோ ஒரு பத்திரிக்கையில் தொடராக வெளியிட்டார்கள்! ஞாபகம் இல்லை.

அந்தக் கதையை நான் படித்தது, அதன் கடைசி நாளில், அதாவது கதையின் முடிவில், கதா நாயகி ஏரோ பிளேனில் தன் இரண்டாவது காதலரை சந்திப்பதோடு கதை முடியும்! அந்த ஒருப் பக்கத்தின் பாதிப்பு எனக்கு பல நாள் இருந்தது! ஆனால், இன்று வரை நான் அந்தக் கதையை வாங்கி படித்ததில்லை.

·          முதல் காரணம்- சோக முடிவுகளை தாங்க இயலுவதில்லை, அழுகை வரும், ஒரு மூன்று நாட்கள், அதை குறித்தே யோசிப்பேன், தேவையில்ல கோபங்கள் கூட
·          இரண்டாவது காரணம்- வாழ்கையில் நாம் அனைவரும் சந்தோசமாகவே இருக்கிறோமா என்ன, இந்த சோகத்தை கதையில் போய் படித்துக் கொண்டு என்கிற விரக்தி மனப்பான்மையாக இருக்கலாம்
 
ஆனால், சமீபத்தில் இணையத்தில் எல்லோரும் சுஜாதா சுஜாதா என அதிகம் புகழ,எனக்கும் ஒரு ஆவல், இந்த மனிதர் அப்படி என்ன தான் எழுதி இருக்கிறாரோ, படித்து தான் பார்ப்போமே என்று...

என் தந்தையை நச்சரித்து, மதுரையில் இருக்கும் விக்டோரிய நூலகத்தில் "நைலான் ரதங்கள்" (நான் கேட்கவில்லை, அவராகவே சுஜாதா என்ற பெயர் பார்த்து எடுத்து வந்தார்) என்கிற புத்தகத்தை எடுத்து வந்து படிக்கச் சொன்னார்.

முதலில் கதை புத்தகம் என்றதும் முகம் மலர்ந்த நான், கவிதை எனவும் ஐயோ என்றாகிவிட்டது, சரி என்ன தான் எழுதி இருக்கிறார் பாப்போம் என்று, புத்தகத்தை கையில் எடுத்த என்னால் புத்தகத்தை  கீழே வைக்க இயலவில்லை!

ஒவ்வொரு ஹைக்கூ கவிதையும் அருமை! இது சிலருக்கு பிடிக்கலாம, பிடிக்காமலும் போகலாம் என்றே அவர் முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார், அதனால், அந்த சிறுகவிதைகள் எல்லோருக்கும் பிடிக்குமா, தெரியவில்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது...

நான் வாசித்து ரசித்தது கீழே... :-))

தமிழணங்கே!
கன்னடமும் களிதெலுங்கும்
கவின் மலையாளமும்
உன்னுதரத் துதித்தென
இவர்களிடம் பெருமையுடன்
சொன்னதுமே தமிழணங்கே
இங்கெதற்கு பிழைக்க வந்தாய்
சென்னைக்கே திரும்பிச்செல்
என்றம்மைத் துரத்துகிறார்....

இன்று நாம் பலரும் பெங்களூரு சென்று வேலைப் பார்க்கிறோம், ஆனா ஒரு முப்பது, நாற்பது வருடம் முன்பே பெங்களூரு சென்று, பணி செய்து, அங்கே தமிழ் மொழியை உயர்த்திப் பேசி, தான் எதிர்க் கொண்ட வார்த்தைகளை விவரிக்கிறார்! இது பெங்களூரு சென்றவுடன் நான் அனுபவித்த அதே உணர்ச்சி என்பதால், என் பிரிய கவிதையாகியது......
 
இரைச்சல்
நிசப்தம் தேடி
விளிம்புக்குச் சென்றாலும்
மனசுக்குள் இரைச்சலை
யார் கொல்வது......

அலைபாயும் மனதைப் பற்றியும், அதை அடக்க முடியா மனிதனின் நிலையையும் ஒன்பது வார்த்தைகளில் நமக்கு புரிய வைத்து விடுகிறார்....

ஒரு ஹைக்கூ
சந்திரனில் இறங்கும் முன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்பும்முன்
பூட்டினேனோ....


இந்த ஒன்றைக் கொண்டு அவரது ஹஸ்ய உணர்சிய கண்டுகொண்டு விடலாம்.... 

இப் புத்தகத்தை நான் முடித்தது இரவு பன்னிரெண்டு மணியளவில் தான்....
முதலில் சொன்னது போல், கவிதை அறியாத, அல்லது புரியாத எனக்கு மிக நன்றாக புரிந்த முதல் இரண்டு புத்தகங்கள் இவை.

படித்துவிட்டு எனக்கு உடனே நானும் ஏதோ எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது, அடக்க முடியாமல், என்னுடைய பர்சனல் டைரியில், நான் எழுதிய ஹைக்கூ என் பாணியில்...

சுஜாதா அவர்களின் பாணியில் சொன்னால், உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்..இருப்பினும் அவரின் எழுத்தைப் படித்த உந்துதலில் நான் எழுதியது இவை.


யாரும் தேடுகிறார்களா என்று பார்த்தேன்
யாரும் தேடவில்லை, அம்மா மட்டும்
சாப்பிடுகிறாயா அம்மு என்றார்!


கோவிலுக்கு செல்ல நினைத்தேன்
என்னத்தை வேண்டிக்கிட்டு
நாளைக்கு வருகிறேன் கடவுளே என்றுவிட்டேன்


தேடுதலை நிறுத்திவிட்டேன்
வாழ்க்கை சுவைக்கவில்லை
மறுபடியும் தேடுகிறேன்....


உண்டுவிட்டேன், நீ அருகில் இல்லை
என்ன செய்ய, பசித்தது
உண்டு விட்டேன்


ட்விட்டர்றுக்கு இன்னும் ..
தமிழ் வார்த்தை கண்டுபிடிக்கவில்லையா
அநியாயம் தமிழ் சமுதாயமே!
 

பேச்சைக் குறை என்கிறார் அம்மா
அதை முயன்று குறைத்து தான் பேசுகிறேன் என்றேன்
என்னை முறைத்தார் என் அம்மா

முடியலடி என்கிறார் என் அம்மா
என்னம்மா செய்யுது- பதறும் நான்...
ஒண்ணுமில்ல, இரவு உணவுக்கு தோசை ஊதட்டுமா என்றார்
என் அம்மா..


உடனே கொடு கடவுளே என்றேன்
நீ என்னை மதிப்பாயா என்றார் கடவுள்..
பிறகே கொடு- என்றுவிட்டேன்!


வேண்டாம் என்று நினைத்தாலும்,
நமக்கு வேண்டும் போல, என்று உணரவைக்கும்
ஒரே ஜீவன் அம்மா...


என்னதான் அழகேன்றாலும்- பார்பி
அலங்காரப் பதுமை தான்-
கரடிக் குட்டி தான் எனக்குப் பிடித்தம்


கட்டிலில் அமர்ந்து இன்றைய நாளில் என்ன சாதித்தோம்
யோசித்தேன்...
மனதிடம் பொய் சொல்லப் பிடிக்கவில்லை...


பஸ்ஸில் முன் சீட்டுக் குழந்தை
தன் அம்மாவின் தோளில் சாய்ந்து- என்
முகம் பார்த்து சிரிக்கிறது..
அதன் கண்களில் நான் ஒரு தேவதை---
எனக்கு பெருமையாக இருந்தது..நானும் சிரித்தேன்
என் குழந்தைத் தோழியைப் பார்த்து...


குழம்பிய மனத்திடம் சென்று புலம்பாதே ..
அதற்கு கண்ணாடி முன் புலம்பலாம்
அது நம்மைச் சிறிதே குழப்பும்...

நாகரீகம் பேசும் பெங்களூர் சமுதாயமே
உன் முன், மஞ்சள் பூசி, பெரிய பொட்டோன்று வைத்து
சிவப்பு நிரப புடவை அணிந்து , உனக்கு அதிர்ச்சிக்
கொடுக்க தீராத ஆசை !!!


இவை அனைத்தையும் எழுதி முடித்த உடனே தான் அன்று என்னால் உறங்க முடிந்தது....
நிம்மதியான உறக்கம்.. இனி சுஜாதா அவர்களின் புத்தகங்களைத் தேடித் பிடித்து படிக்க வேண்டும்....

மதுர பொண்ணு