Monday, December 31, 2012

2012 புத்தாண்டு ---> 2013 :-)))


2012--->2013


மிகுந்த சந்தோசமாகவும், அதே சமயம் பல அடிகளையும் கொடுத்த வருடம்! உண்மையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்  நிரம்பியது. என் ஆங்கில பதிவேட்டில் பல மாற்றங்களை நான் செய்த வருடம். எழுத வேண்டும். அது போதும் என்று முடிவெடுத்ததும் இவ்வருடத்திலேயே.....


போன வருடம், இதே நாளில் பெங்களுருவில் இருந்தேன்!

 ஒரு நாள் முன்பே வரவேண்டும் என்று அன்புத்தோழிகளின் அன்புக்கட்டளை. ஒவ்வொரு வருடமும்  இங்கே செல்லவேண்டும், அங்கே உணவு உண்ண வேண்டும் என்று ஆயிரம் பிளான்ஸ் செய்வோம். ஆனால் ஊரினுள்ளே இருந்தபோதும் அது மட்டும் கைவந்ததே இல்லை.


போன வருடமும் அதே போல், ஹைதராபாத்தில் இருந்த என்னை, பெங்களூர் வந்தால் தான் ஆயிற்று என்று அன்புத்தொல்லை செய்தனர் கன்னடத்து தோழிகள்.
சரியென்று, பெங்களூர் சென்றால், முதலில், மைசூருக்கு சென்று அங்கு ஒரு ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் டான்ஸ் என்பது வரை திட்டம் தீட்டி வைத்திருந்தனர் . இது என் தோழி தேஜுவின் நெடுநாளைய கனவு. இதில் எனக்கு ஷாப்பிங் வேறு. ஆனால் அன்று சாயங்காலம் எங்களைப்பார்க்க வந்த தோழியின் வருங்கால கணவன் விபத்தில் சிக்கி பலத்த காயம். அத்தனையும் கான்சல் செய்தோம். சரி, போகிறது என்றால், தோழியின் காதலன்  வீட்டில் இவர்கள் காதலுக்கு பயங்கர எதிர்ப்பு, பையன் தெலுகனாகவும், பெண் கன்னடாவாகவும் இருந்ததே பிரச்சனை.இவள் அழுத அழுகையில், சரியென்று புத்தாண்டு காலையில் ஒரு சிறு அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மருத்துவமனை சென்றால், அங்கே பையனின் சித்தி ஒரே கத்தல். மானம், ரோஷம், குடும்பம்  அதைத்தவிர   பல கன்னடா கெட்ட வார்த்தைகளை கேட்க நேர்ந்தது. இவளை மட்டும் உள்ளே அனுப்பாமல், எங்கள் இருவரையும் உள்ளே அனுப்பிய அந்த சித்தியின் திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால், இவள் அழுது கரைகிறாளே, என்ன செய்வது என்று யோசித்தபொழுது, என் தோழி லாவண்யா, ப்ரதி, நீ தான் ரெம்ப தைரியம், நீ தெஜுவ கூட்டிட்டு உள்ளே போ என்றாள்.

என்ன தான் தைரியமான பெண்ணாக நான் இருந்தாலும், அந்த சித்தியம்மா இருந்த சைசில் எனக்கு உள்ளே உதறல் எடுத்தது உண்மை. இருந்தாலும் நம் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மென்ட் வீக் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், உள்ளே அவளை இழுத்துச்சென்றேன்.

அவ்வுளவுதான், அந்த சித்தி கத்திய கத்தில் மருத்துவமனையே கிடுகிடுத்தது. என் தோழியைப் பார்த்தால், காதலனின் அருமை அடிப்பட்ட முகத்தை பார்த்து சோகப்பதுமையாக நிற்கிறாள், கத்தல் என்னமோ நிற்கிற மாதிரி தெரியவில்லை ,என் தோழியைச்சொன்னதும் எனக்கு பொங்கியதே கோபம்."இல்லா, மாத்தாட பேடா, ஏனு ஆன்டி இல்லி --------- அப்படி இப்படியென்று நான் கன்னடாவில் விட்ட பிட்டரில் என் தோழியே ஒரு நிமிடம் அழுகையை விட்டு என்னை பார்த்து நிற்கிறாள்


ஒரு வழியாக, அடிப்பட்ட காதலன், செல்லுமாறு செய்கை செய்ததும், இவளும் சுயநினைவுக்கு வந்து, மெதுவாக நகர்ந்தாள், வெளியில் வந்ததும் அப்பாடி, விடுதலை என்ற உணர்வு எனக்கு.


வெளியில் வந்ததும் நானும், அவளும், லாவண்யாவும் எங்கள் முகத்தை பார்த்து நாங்களே சிரி சிரியென்று சிரித்தோம் :))


இதில் கொடுமை என்னவென்றால், அந்த அம்மா கத்தியதை விட , நான் கன்னடா பேசிய அழகே, அவளை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது, என் தலை எழுத்து.
அதைச்செய்ய வேண்டும், இங்கு செல்ல வேண்டும் என்று பல விஷயங்களை திட்டம் செய்து ஒன்றுமே செய்யாமல் ஊர் வந்து சேர்ந்தாலும், இன்றும் நினைத்து சிரிக்க வைக்கின்ற புது வருடம்!


அதை தவிர்த்து, வேலையில் இருந்து ரிசைன் செய்தது! இப்பொழுது அது நான், தேவை இல்லாமல் எடுத்த முடிவாகப்படுகிறது! ஆனால் வருத்தமில்லை, அம்மா, அப்பா, அருகில் ஆறு வருடம் கழித்து இருக்கின்ற வாய்ப்பு அளித்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றிகள்.இந்த வருடம் ட்விட்டரில் என் புதுவருஷம்! நாளை காலை கோவில்! மனதிற்கு பிடித்த ஒரு புத்தகம்!  போதும், என்னை மகிழ்ச்சியாக்க!


இனி எந்த தோழி அழைத்தாலும் புதுவருடம் மட்டும் :நான் ஊரிலேயே இல்லையே !!! :)) என்றே பதில் வரும்எழுதிக்கொண்டே இருக்கவேண்டும், அது மட்டுமே புத்தாண்டு விருப்பம்
உங்கள் அனைவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 


மதுரபொண்ணு

Monday, December 17, 2012

மார்கழித்திங்கள்

மார்கழித்திங்கள்
நேற்று தொடங்கியது மார்கழி மாதம். கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று காலையில் இருந்து தொல்லை செய்து எனக்கும் என் அம்மாவிற்கும் நடத்த சிறு பனிப்போரால் நிறுத்திவைக்கப்பட்டது.
போன வருடம் இதே மாதம் தான், எனக்கு மார்கழி குறித்து அறிமுகம். அப்பொழுது புதியதாய் பஞ்சசமஸ்தானம் வாங்கிய என் அம்மா ஹைதேராபாதிற்கு போன் செய்து, அதிகாலையில் குளித்து விட்டு திருப்பாவை படி என்றார்.
வழக்கம் போல், போங்கம்மா என்று சொல்லவந்த நான், ராபின் ஷர்மாவின் புத்தகத்தை அப்பொழுது தான் படித்து முடித்திருந்தேன்.
ராபினின் புத்தகத்தில் வந்த ஒரு நல்ல விஷயம் என் ஆள் மனதில் நன்றாக பதிந்தது, அது அதிகாலையில் எழுந்தால் நாள் முழுவதும் நன்றாக, சுறுசுறுப்பாக இருக்கலாம், வாழ்கையை நல்வழியில் செலுத்த காலையில் எழுவது மிக முக்கியம் என்று இருந்தது.
அதே நேரத்தில் மார்கழியும் சேர்த்து வந்ததால் ,சரி, இந்த ஒரு மாதம் எழுந்து தான் பார்ப்போமே, கடவுளையும் கும்பிட்டு, நல்ல பழக்கம் ஒன்றையும் உருவாகிக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம்.
எனது அறைதோழியர் மூவரும் நன்றாக தூங்கும் ரகம். அவர்களுக்கு அந்த ஒரு மாதமும், அடுத்து தொடர்ந்து வந்த மாதங்களும் கட்டம் சரியாயில்லை. :) நான் சிக்கிரம் எழுந்ததால் :)
எனக்கு என் அலுவலகத்தில் யு கே ஷிப்ட், அதாவது, மதியம் ஒரு மணிக்கு சென்று இரவு பத்து வரை பணி. டிராபிக் இல்லாததால் இது எனக்கும் விருப்பமான நேரமே. ஆனால் எங்கள் ஆபீசில், பத்து மணி என்றால் தொடர்ந்து பல சமயம்', நான் ஒரு மணி வரை இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கிறது.
அதுவும் மாத தொடக்கத்தில் நான் வீடு வர, அதிகாலை, நான்கு, ஐந்து என்று மணியாகும்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, ஒரு மூன்று நாள் , சிறு விடிவிளக்கை போட்டு திருப்பாவை படித்தேன். என் அறை தோழி, யு கேர்ள், டோன்ட் டிஸ்டர்ப் எர்லி மார்னிங் யா" என்று  எரிச்சல் கீதம் பாடியதால், சரி ஹாஸ்டலின் வெளி அறையில் அமர்ந்து படிக்கலாமே என்று தொடர்ந்தேன்.
என் அறை கப்போர்டில் பெருமாள் படத்தை வைத்தால், முன்னால் கடவுள் இல்லாதது போல் இருந்தது, சரி, வெளியில் சூரியனின் முன் நின்று படிப்போமே என்று நித்தமும் சூர்ய உதயத்தில் திருப்பாவை படித்தேன்.
அந்த குளிரில் நின்று வெடவெடத்தல் பரமசுகம் . இருளும், வெளிச்சமும் கலந்து கலவா அந்த காலை வேளை- மயக்கம்
ஸ்ரீ ராமரே சூரியனை தான் குலக்கடவுளாக தொழுதார் என்பது எனக்கு நானே கொடுத்துக்கொண்ட சமாதானம். ;) சூரியனின் முன் திருப்பாவை தொடர்ந்தது
இதில் என்ன விசேஷம் என்றால், மார்கழியை விட, ஏன் திருப்பாவையை விட ,என்னை கவர்ந்தது அதிகாலை சூரிய உதயம்.
வாழ்கையில் எனக்கு நேர்ந்த மிக பெரிய சந்தோசம் அது, ஆந்திர தேசத்தில், என்னை நானே பரவசப்படுத்தி கொண்ட நாட்கள் அவை, அதிலும், இங்கே, தமிழகத்தில் போல் சுள்ளென்று உயராமல், ஒரு வித மந்தமான வெளிச்சத்திலேயே சூரியன் உதயம் ஆவதை பார்க்க கோடி கண் வேண்டும்.
எனக்கு நடந்த நல்ல விஷயங்களை, பலரிடம் பகிர்ந்து கொள்ளுவது என் வழக்கம், என் தோழிகளிடம் இது பற்றி சொன்னேன், எல்லோரும் "அப்டியா, என்ஜாய் " என்றார்களே தவிர, சூரியனை என் போல் காதலிக்க எழ வில்லை.
மனோத்தத்துவமா இல்லை உண்மையா தெரியாது, என்னுடைய வாழ்கையில் சிறந்த நாட்கள் அவை.அதிகாலை விழித்து, கடவுளை தொழ கூட வேண்டாம், அந்த அமைதியை உணர்ந்தாலே போதும்.
ஒரு வருடம் சென்றது போலவே இல்லை, மறுபடியும் மார்கழி, ஆனால் மதுரையில், நான் மாட கூடலில், என் கூடல் அழகனின் முன்னிலையில் இன்று, அதிகாலை திரும்பவும் திவ்ய தரிசனம்.
கடவுளை, நம்புவதும், நம்பாமல் இருத்தலும், மனிதனுடைய விருப்பம், ஆனால், இயற்கையை காதலிக்க கற்றுகொள்ளுவது, பெரிய சந்தோசங்களை தேடிகொடுக்கும்.அந்த காலத்தில் நம் நன்மைக்காகவே பலவிஷயங்களை செய்தும், சொல்லியும் சென்று இருக்கிறார்கள், ஆனால் பலர் விஞ்ஞானம் என்கிற பெயரில் உதாசீனப்படுத்துவது வருத்தமே
மறுபடியும் ஒரு மாதம், திருப்பாவையும், வாரணம் ஆயிரமும், சூரியனோடு, கொஞ்சம் தமிழையும், காதலையும் கற்றுக்கொள்ள உதவும் :) நன்றி கோதை நாச்சியார் ஆண்டாளுக்கு .
மகிழ்வான மார்கழிக்கு வாழ்த்துக்கள்
மதுர பொண்ணு

Saturday, December 15, 2012

நீ தானே என் பொன் வசந்தம்- விமர்சனம்

தியேட்டரில் இருந்து வெளியில் வந்ததும் வருனிடமிருந்தும், நித்யாவிடமிருந்தும் கிடைத்த விடுதலை உணர்வு .அப்பப்பா :)

மிகச்சிறந்த முதல் பாதி, அர்த்தமே இல்லாமல் இரண்டாம் பாதி என்று பயணிக்கிறது கதை.

நித்யாவும், வருணும் பள்ளி பருவத்தில் இருந்தே அறிமுகமான நண்பர்கள் (?) . இவர்களின், சண்டை, சச்சரவு, குழப்பம், வெறுப்பு, ஈகோ, பணம் எல்லாமே மறுபடியும் மறுபடியும் இவர்கள் பிரிவதற்கு காரணம் ஆகிறது.இந்தச்ச்சண்டை கல்லுரி, வேலை செய்யும் காலம் என்று தொடர்ந்து ஜீவாவின் திருமணத்தில் முடிகிறது.
இதற்கு காரணம், இருவரிடம் இருக்கும் நீண்ட வாய் என்பது என்னுடைய கணிப்பு. பல காட்சிகளில் பேசியே கொல்கிறார்கள்.
முதலில் படத்தின் சிறப்பான அம்சங்களை பார்க்கலாம்

 • சமந்தாவின் அழகு, பொண்ணு உண்மையிலேயே அழகா இருக்கா, அதுவும் புடவை உடுத்தும் காட்சிகளில் தேவதை தான்
 • முதல் பாதியில் வரும் சந்தானத்தின்  ஒன் லைன் சிரிப்பு வெடிகள்
 • அருமையான கேமரா வொர்க், மனப்பாறை (திருச்செந்தூர்) இடங்களை மிக அழகாக காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளார்
 • இசை- உண்மையில் சமீப கால ராஜாவின் இசையில் நாட்டம் இல்லாத என்னையே ரசிக்க வைத்தது
 • சாய்ந்து சாய்ந்து பாடல்
 • சந்தானத்தின் காதலியாக வரும் குண்டு பெண்- அழகாய் இருக்கிறார், நல்ல நடிப்பும் கூட
 • சமந்தாவின் நடிப்பு, ஏ மாயா சேசாவே தெலுகு படித்தில் பார்த்த பொண்ணா இது , நம்ப முடியவில்லை, நல்லா நடிச்சிருக்காங்க
 • சில இடங்களில் வசனம், மறுபடியும் சந்தானதிற்கே வெற்றி,  ரேஷன் கடையில் பாமாயில் வாங்க போலாமான்னு கேளேன், சொல்லிட்டு தான் கரெண்ட் கூட கட் பண்றாங்க, இவளுங்க, எப்போ கட் பண்ணுவாளுங்கனு புரியல மச்சான் சீனில் இவருக்கே அதிக விசில்
 • உண்மையில் வருண், நித்யா காதலை விட, சந்தானம், குண்டு அழகி காதலே என்னை வசீகரித்தது
 • உடைகள்

இவ்வாறு, சில பாசிட்டிவான விஷயங்களே படத்தில்!! வருணின் அப்பாவாக வரும் ரவி ராகவேந்தருக்கு பின்னணி  குரல் உண்மையில் ஒட்டவே இல்லை.!
அதே போல், கேட்டில்(CAT) ஒரே முயற்சியில் சில மாதங்களே படித்த ஜீவா வெற்றி பெறுவதும் அப்படியே.சொந்த அனுபவம் ???!! :))  முரண்பாடுகள்.
நீ எங்கே போனாலும் , நானும் அங்கே வருவேன் என்பது ,ஒரு பணக்கார காதலியின் விவரம் இல்லாத பேச்சு, இதை கேட்டு, ஜீவா ஒதுங்க நினைப்பது நடுத்தர வர்க்கத்திற்கு சாத்தியமே.
சில சமயங்களில் பணம் பயமுறுத்தவே செய்கிறது. ஆனால், அவ்வுளவு, கடினமாக பேசி பிரிந்த பின்பும், மூன்று வருடம், இ மெயில் எழுதியதெல்லாம், நம்ப முடியாத பூ சுற்றல்.
ஏம்பா, நீங்கல்லாம் அவ்ளோ நல்லவங்களா?? என்ன பண்றது படம். மிச்சத்தையும் பார்துருவோம்.
எல்லோரும் சொன்னது போல, மாடர்ன் குஷி எடுக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர்.
குஷியில் சொல்லாமலே இருந்த அந்த ஒரு ரசாயனம், பயாலஜி, பிசிக்ஸ் எல்லாமே இங்கே மிஸ்ஸிங்.
சமாந்தாவிற்கும் ஜீவாவிற்கும் கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. என்னமோ  நோய் வந்தவர் போல இருக்கிறார் ஜீவா, சிவா மனசுல சக்தியில் கொழுந்து விட்டு எறிந்த காதல் தீ, இங்கே புஷ்ஷாகி போன புஸ்வானம் போல இருக்கிறது. சில காட்சிகளில் வரும் சண்டைகள் நியாமான ஒன்றே, உதாரணத்திற்கு, பள்ளி பிரிவின் பொது, நீ ஏன் அவன் கிட்ட பேசுன? என்பது போன்ற உரிமை கோபம், காதலில் சாத்தியமே(தோழிகள் உபயம்)
ஆனால் தொடர்ந்து வரும் சண்டைகளில் நமக்கு மூச்சடைத்து போவதேன்னவோ உண்மை. இவ்ளோ சண்டை போட்டு இவங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே சேரனுமா? என்று நாமே இவர்களை பிரித்து வைத்து அழகு பார்க்கலாம் என தோன்றுகிறது நமக்கு.
சத்தியமா இதுக்கு முன்னாடி நான், ஹீரோவையும், ஹீரோயினையும் பிரிச்சு வைங்க பா என்று எந்த படத்திலும் சொல்லும் நிலைமைக்கு வந்ததில்லை.
 அதற்காகவே கௌதமிற்கு என் வாழ்த்துகள். இவங்க ஒன்னு சேர்ந்து என்ன தான் பண்ண போறாங்க? அப்புறமும் சண்டை தான், அதுக்கு தள்ளி வைங்க- என்று ஒவ்வொரு உள்ளமும் குமுறியது என் சிறு மூளைக்கு தெளிவாக கேட்டது :)
இரண்டாம் பாதியில், அதுவும் கடைசி அரைமணிநேரத்தில், நமது பொறுமை என்கிற உயர்ந்த குணம், நம்மை விட்டு தூரம் செல்கிறது.
சமந்தா ஜீவாவின் கல்யாணத்திற்கு சென்று, என்னை வெறுக்காதே என்கிறார், சரின்னு ரெண்டு பேரும்,ஜீவாவின் காரின் சிறு வயதில் இருந்த பார்த்து பழகிய இடத்திற்கெல்லாம் கடைசி பவனி செல்கிறார்கள்.
அங்கேயும் சமாதனம் ஆகவில்லை. சத்தியமா சொல்றேன், எஸ் ஜே சூர்யா ரெம்ப நல்ல இயக்குனர். கெளதம், நம்ம கவனத்தை இறுக்கி பிடிக்கிற வித்தையை இன்னும் கத்துகொள்ளவேனும்.
இந்த பவனி வந்த காட்சியில், என் பின்னால் அமர்திருந்ததம்பதி, கமேண்டி கொண்டே படம் பார்த்தனர். ஆனால், கணவன் ஒரு ஸ்டேஜில் பொறுமை இழந்து, ஏன்டி, படத்த புல்லா பார்த்துட்டு தான் வருவியா? என்று கேட்டார். அந்தோ பரிதாபம் !!! :))
 எங்கள் சீட்டில் அமர்ந்திருந்த அனைவரும் அவரிடம் பரிதாபபட்டோம்
கடைசி நிமிடம் வரை சண்டை சண்டை சண்டை அப்புறம் ஒரு கிஸ்(இது வேறயா)இவங்க சண்டை உலகம், அழியுமா,அழியாதா என்பது போல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஒரு வழியா, கடைசியில் ஒன்னு சேர்ந்து சுபம், சுபம் சுபம்

 • படத்தில் மிக பெரிய + இசை, சில இடங்களில் பொருந்தாமல் இருந்தாலும் ராஜா ராஜா தான்
 • மிக பெரிய மைனஸ் ஜீவா, நடிப்பு ரெம்ப செயற்கை,நடிகன் ஜீவாவிற்காக ஏக்கம்.
 • திரைக்கதை ஜவ்வு மிட்டாய் போல் இழுக்கிறது, கெளதம் கொஞ்சம் ஹரி படங்களை பார்த்து அப்டேட் செய்து கொள்வது நலம்.
 • ஒரே ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக. அதுக்கு மேல வொர்த் இல்ல.

 • இசைஞானியை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகனுக்கு இசை பிடிக்கும், 
 • மத்தவர்களுக்கு சில காமெடி சீன்களும், இளமையான சமந்தாவையும், சந்தானத்தையும் பிடிக்கும்


3/5 -ஒரு முறை பார்க்கலாம்

மதுரபொண்ணு