Monday, January 28, 2013

மதுரை, உடுமலை, பெங்களூரு, ஹைதராபாத்

நம் வாழ்கையில் பல இடங்களை, ஊர்களை,நாம் கடந்து செல்வோம்.  ஒரே ஊரில் வாழ்நாள் முழுவதும் இருப்போம், இல்லையென்றால், ஊர் விட்டு ஊர் சென்று பிழைப்போம். சிலர், தங்கள் சொந்த ஊர்களின் நினைவுகளில் மூழ்கி நிகழ்காலத்தை ஏக்கத்தில் தொலைப்பார்கள்.
தவறு இல்லை, எல்லோரும் செய்வது தான்.
இந்த பதிவு அவ்வாறாக, என்னை பாதித்த, நான் வாழ்ந்த இடங்கள்ப் பற்றி

மதுரை
என்னுடைய ஊர், இதைப் பற்றி நான் என்ன சொல்ல, என் ரத்தத்தில் கலந்தது மதுரை, என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்

"மதுரைய சுத்தின கழுத கூட வெளில போகாது" என்று, அப்பொழுதெல்லாம், ஆமா, இங்க என்ன இருக்கு, என்று அலட்சியம் செய்தவர்களில் நானும் ஒருத்தி



ஆனால், என் அம்மா சொன்னது  எவ்வுளவு உண்மை என்பதை நான் வெளியூர் சென்றதுமே உணர்ந்து கொண்டேன். மதுரையின் சிறப்பாக நான் முன் வைக்க விரும்புவது, மனிதர்களின் வெள்ளந்தி குணத்தையே.

ஆனால், தமிழ் சினிமாவில் எங்கள் ஊரைப் பற்றி கேவலமாக சித்தரிக்கிறார்கள். மதுரையில் வளர்ந்தப் பெண்ணான எனக்குக் கடுமையான கோபம் உண்டு.
நான் சத்தியமா சொல்கிறேன், சினமாவில் காட்டுவது போல் எங்கள் ஊரில் முக்கு மூக்கிற்கு யாரையும் அடித்து உதைக்க மாட்டார்கள்!

 நான் இருபத்தியொரு வருடம் மதுரையில் வளர்ந்த பெண், ஒரு கலவரத்தைக் கூட நான் பார்த்ததில்லை. ஒருவர் கூட என் முன் கொல்லப் படவில்லை.
ஏன் இவ்வாறாகச் சித்தரிக்கிறார்கள் என்று புரியவில்லை.

ஒன்று இவர்கள் பார்த்தது அவ்வகை மனிதர்களாக இருக்க வேண்டும், இல்லை தன்னை பாதித்த சில சம்பவங்கள் குறித்து படம் எடுக்க வேண்டும். சென்னையிலும், கோவையிலும், திருச்சியிலும் இருக்கும் வையலன்ஸ் இங்கும் உண்டு, இங்கு மாத்திரம் உண்டு என்பது, ஒரு நோய்க் கொண்ட மனதின் சித்திரமே தவிர நிஜமல்ல.




சிறப்பான விஷயம்- இங்கு கிடைக்கும் உணவு! மதுரையில் பெரிய பெரிய ஹோடேல்களில் சென்று சாப்பிடாதீர்கள், இங்கே சிறு சிறு கடைகளில் நான் வெஜ் உணவுகள் சுவையாகக் கிடைக்கும்.

முதலில் எல்லோரும் பேசும் கோவில்களுக்கு நான் கடைசியிலே தான் வருகிறேன், மதுரை என்றவுடன் மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

ஆனால் இங்கே கூடல் அழகர் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தம். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பாடுவர் "பல்லாண்டு பல்லாண்டு" வைணவம் புரிந்தவர்களுக்கு நான் சொல்லுவது புரியும், அது முதல்முதலில் இந்தக் கோவிலில் தான் பாடப் பட்டது.

என்னைப் பொறுத்த வரையில் மிக மிக சக்தி வாய்ந்த கடவுள், என்னுடைய  welwisher என்றே நான் அவரைக் குறிப்பிடுவேன். சக்தியை உணர்ந்ததால்!


மதுரையில் இருக்கும் சந்துகளின் பெயர் நீங்கள் எங்கும் கேள்விப் படாததாக இருக்கும், மேல ஆவணி மூல விதி, வடக்கு மாசி வீதி என்று தமிழ் மாதப்பெயர்களில் இருக்கும்.

மதுரையின் இன்னொரு சிறப்பு -இங்குப் பேசப் படும் தமிழ்- உண்மையிலே கேட்க நன்றாக இருக்கும், நான் கவனித்த வரையில், இங்கு உச்சரிப்பு சிறப்பாக இருக்கும், தமில் என்று சொல்லாமல், தமிழ் என்று அழுத்தி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.

கண்ணகியின் மீது (அது உண்மைக் கதையாக இருந்தால்) பயங்கர கோபம் உண்டு, ஊர் மேய்ந்து வந்த கணவனை மறுபடியும் ஒப்புக்கொண்டதே தவறு, அது மட்டிலும் இல்லாமல், மன்னன செய்த தவறுக்கு ஊரைப் பற்றி எறிய வைத்தது, அவளின் இயலாமை தான் , தவிர, வீரம் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

உடுமலை:-

இந்த ஊரைப் பற்றி நான் பேசுவது எனக்கு மிகவும் இனிப்பான அனுபவம். எங்கள் வீட்டில் அவ்வுளவு, வெளியூர் ட்ரிப் எல்லாம் கூட்டிச் செல்ல மாட்டார்கள், அப்பா வெளிநாட்டிலும், அம்மா வேலை பார்ப்பவராகவும் இருந்ததால், எப்பொழுது கேட்டாலும்,

அதெல்லாம் இன்னொரு தடவை போகலாம் பாப்பா, என்றே பதிலே கிடைக்கும்.

அந்த சமயத்தில்,(என்) நல்லவேளையாக என் மாமாவிற்கு உடுமலை பேட்டை என்கிற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்தது. முதன்முதலில் உடுமலைக்கு நான் சென்றபோது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருந்திருக்கக்கூடும். சூரியனின் கடாட்சியம் பெற்ற மதுரையில் பிறந்த நான், குளிர் மட்டுமே பிரதானமாக இருந்த உடுமலையை கனவுலோகமாகக் கொண்டதில் ஆச்சர்யம் இல்லை. எங்கு பார்த்தாலும் குளுமை, மரங்கள், இலைகள், அமைதி, குறைந்த மனிதர்கள்- இனிமை மிகுந்த மனிதர்கள் என்றிருக்கும் ஒரு ஊர்.




அதிலும், திருமூர்த்தி மலை, அதன் நீர்வீழ்ச்சி, அருமையோ அருமை! உண்மையில் கற்கண்டு போலவே சுவைக்கக்கூடிய நீர் அது! அதிலும் சிறு சிறு குளங்கலாக நீர்வீழ்ச்சி நீர் ஆங்காங்கே இருக்கும், அக்குலங்களில், மீன்களின் வீனைமீட்டலோடு குளிப்பது எங்குமே சென்றிராத எனக்கு நிச்சயம் சொர்கலோகமே!

சில்லென்று இருக்கும் நீரில் குளித்து வந்தால், வீட்டிலேயே செய்து எடுத்து வந்த புளியோதரை, சிப்ஸ், கத்தரிக்காய் கூட்டல் போன்ற தேவாமிர்த உணவு ஒரு பரிசாகவே கிடைக்கும்.

உணவை உண்டுவிட்டு, மீண்டும் ஒரு குளியல், என் ஒன்றுவிட்ட அண்ணனும் , நானுமே ஒரே வயதினர், எங்கள் இருவரின் மேல், நாங்களே நீரைத் தெளித்து, சண்டை போட்டு, விளையாடி, ஆண்டவா, எங்கே என் குழந்தை நாட்கள்?? என்றுக் கேட்க தோன்றுகிறது.

இதை தவிர்த்து, அமராவதி டாமும் பார்க்க வேண்டிய இடம், இதை தவிர்த்து, சில கோவில்களுக்கு சென்று இருக்கிறோம், பெயர், மிகச் சின்னவளாக இருந்ததால், நினைவில்லை. மொத்தத்தில், எல்லோரும் அனுபவிக்க, ரசிக்க வேண்டிய ஊர் உடுமலை. கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்க வில்லை.மீண்டும் வாய்ப்பு அமைந்தால், கடவுளுக்கு என் நன்றிகள் பல......

பெங்களூரு
என் வாழ்நாளில் மதுரையை திட்டி, ஒரு ஊரை நான் ஒரு காலத்தில் உயர்த்தி பேசியது இந்த ஊரைத் தான்! நான் மதுரைக்கு அடுத்து பல முறை சென்றதும், அதிகம் வருடங்கள் வசித்தும் இந்த பூங்கா நகரமான பெங்களூரில் தான்.

எம் பி ஏ எனக்கு பெங்களூரில் உள்ள, பிருந்தாவன் கல்லூரியில் இடம் கிடைத்தது, முதலில் சொன்னது போல், எங்குமே செல்லாமல், என்னை வளர்ததால், ஊர் சுற்ற வேண்டும், பல ட்ரிப்கள், செல்ல வேண்டும் என்கிற ஒரே ஆவலால் மட்டுமே பெங்களூரு நகரை தேர்வு செய்தேன், மேலாண்மை படிப்பிற்கு!



உண்மையில் அருமையான ஊர், நான் சென்ற வருடம் 2005 , பெங்களூரு அப்பொழுது கடைசிக்கட்டப் பூங்கா நகரமாக இருந்தது.
அனைவருக்கும் தெரிந்தது போல், தமிழகத்தில் ஆண்டில் சில மாதங்கள் மாத்திரமே மழை பெய்யும், அதுவும், தொடர்ச்சியாக அல்ல,

பெங்களூர் சென்று நான் படித்த காலத்தில், அங்கே ஒரு நாள் கூட மழை பெய்யாமல் இருந்ததில்லை, சில நேரங்களில், என்ன இந்த ஊர், னை னைஎன்று மழை பெய்து கொண்டே இருக்கிறதே என்று சலிப்பாக இருக்கும்.

மதியம் மட்டுமே, கொஞ்சம் சூரியனைப் பார்க்கலாம், மித்த நேரத்தில், மிதமான காற்று இதமாக வீசிக் கொண்டே தான் இருக்கும்! உணவு மட்டுமே சிரமம் நமக்கு, என்னுடைய முதல் cultural shock என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அது அங்கே இருந்த இட்லியின் அளவைப் பார்த்ததுமே ஏற்பட்டது!

 ஒரு இட்லி நம்மூரில் மூன்று இட்லியின் அளவில் இருக்கும்

அது மாத்திரம் இல்லாமல், எல்லா, வகை குழம்புகளிலும், ரசத்திலும் சர்க்கரையை கலந்திருப்பார்கள்! எந்த குழம்பு வகையும் தமிழகத்தில்,முக்கியமாக காரமாக சாப்பிட்டு பழகியவர்களுக்கு அந்த வகை கன்னடா உணவு பிடிக்க வாய்ப்பில்லை! அதனால் அங்கே இருந்த காலத்தில் நானே தான் சமையல், பிரமாதமாக ஏதும் இல்லை, ஆனால் ரசமும், உருளைக்கிழங்கும் என் கையில் மணக்கும்! அது தான் சுலபமும் கூட...:-))))

இன்னொரு நல்ல விஷயம், பெங்களூரில் இருப்பதால், பல மொழில்கள் கற்றுக்கொள்ளலாம், கன்னடா, தெலுகு, ஹிந்தி, மலையாளம், துளு, ஆங்கிலம் போன்ற மொழிகள் இங்கே தண்ணீர் பட்ட பாடு! பலர் சர்வ சாதாரணமாக, ஐந்து மொழி பேசுவார்கள். அவர்களைப் பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கும், என்னடா தமிழ் மட்டுமே நன்றாகத் தெரியும், ஆங்கிலம் அதை விட கொஞ்சம் கம்மி நன்றாக தெரியும்!

எப்படி இந்த ஊரில் பிழைக்கப் போகிறோம் என்கிற பயம் ஆரம்பத்தில் பெங்களூர் சென்ற எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு எழுபது சதவிகிதம் பேருக்கும் இருந்திக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
உடை விஷயத்திலும், பெங்களூர் அனைவரும் அறிந்தது போல சுகந்திரம் அதிகம் கொடுக்கும் தேசமே,

என் தந்தையும், தாயும் என்னை கல்லூரியில் சேர்க்க வந்திருந்தார்கள்! அப்பொழுது எங்கள் கல்லூரி வாசலில் ஒரு பெண், தன் காதலனின் மடியில் அமர்ந்து, புகைத்துக் கொண்டிருந்தார்!

அதுவரை " அம்மு, இங்கே அப்படி இப்படி இருந்தாலும், நீ நாங்கள் வளர்த்த பெண், தப்பு செய்யக் கூடாது, உடைகளில் நாகரீகமாக அணியாதே என்று சொல்லிக் கொண்டிருந்த என் அப்பா, பாப்பா என்னடா இது, இப்படி இருக்கு இங்க, நீ ஜீன்ஸ் போட்டுக்கோ, கொஞ்சம் டிசெண்டா போட்டுக்கோ மா" என்று சொல்லும் அளவிற்கு என் கல்லூரி இருந்தது :-)


பெங்களூரு உங்களுக்கு இரண்டு வாய்ப்பு அளிக்கும் ஊர், இங்கே அதிகம் சாதிக்கவும் வாய்ப்பு உண்டு, சாக்கடையில் விழவும் வாய்ப்பு உண்டு! நம்மை நாம் செதுக்கிக் கொள்ளுவதில் நம் திறமை ஜொலிக்கும்! ஊர் என்னவோ சிறந்தது தான்!

கன்னடர் குறித்த தப்பான கருத்துதமிழகத்தில் நிலவுகிறது, என்னை பொறுத்தவரையில், என் அனுபவங்களின் அடிப்படையில், கன்னடர் அருமையான குணம் படைத்தவர்கள், காவேரி என்கிற நதி மாத்திரமே அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் தடை! அதை தவிர்த்துப் பார்த்தல் warm hearted என்று ஆங்கிலத்தில் சொல்வது போன்ற குணம் படைத்தவர்கள். மொத்தத்தில், குளிர் குறைந்து, வெயில் நிறைந்து, கூட்டம் அதிகமாகி இருக்கிறது பூங்கா நகரத்தில்.....


ஹைதராபாத்

இங்கே நான் வசித்தது பதினாறு மாதங்களே என்றாலும், எனக்கு மிக மிக பிடித்த நகரங்களில் இதுவும் ஒன்று.
முதலில், பெங்கலோருவைப் போலவோ, அன்றி, மதுரையைப் போலவோ இல்லாமல், இங்கே சுடும் வெயிலும் இருக்காது, கடும் குளிரும் இருக்காது! ஹைதராபாத் செல்லும் முன் இது ஒரு வெயில் பிரதேசம் என்று நினைத்திருந்தேன். முற்றிலும் தவறு!

காலையில், மிதமான குளிர்ச்சி இல்லாத அருமையான காற்றும், மாலை நேரத்திலும் அதே போல் இதமான காற்றும் வீசும். மதிய நேரம் மாத்திரமே சூரியன் உச்சியில், நம் தமிழகம் போல் இருக்கும், அதுவும், சில நாட்கள் மந்தமான சூரியனாகத் தான் நம் கண்களுக்குக் காட்சி அளிப்பார்.

பெங்களூருவை விட கம்பெனிகள் குறைவாக  இருந்தாலும், அதை எவ்விதத்திலும் குறைவிட முடியாத அளவுக்கு இங்கு ஐ டி கம்பெனிகள் இங்கு உண்டு. கூகிள், விப்ரோ, இன்போசிஸ், மைக்ரோசாப்ட் போன்ற புகழ் பெற்ற கம்பெனிகளுக்கு ஹைதராபாத் சொந்தம்.



அதே போல், புத்தர் சிலை, அதைச் சுற்றி இருக்கும் லேக் கண்களுக்கு குளிர்ச்சியாகக் காட்சி அளிக்கும். நான் மிகவும் ரசித்து பார்த்த இடம், ஷில்பா ராமம் மற்றும் பிர்லா சயின்ஸ் ம்யுசியம்.


ஷில்பா ராமம் பொதுவாக, நம் கிராமத்து பாரம்பரிய வடிவில் வடிவமைத்து இருப்பார்கள், அருகே ஒரு பூங்காவுடன், அமர்ந்து அந்த அமைதியான சூழலை ரசிக்கலாம், பொதுவாக சனி, ஞாயிறு கூட்டம் அதிகமாக இருக்கும், விற்கும் பொருட்களும் அதிகம் விலை இல்லாததாக இருக்கும், பேரம் பேசினால், குறைத்து வாங்க வாய்ப்புகள் அதிகம்,

பிர்லா சயின்ஸ் ம்யுசியம் நான் சந்தோசமாக கழித்த இடம், இதே போல் பெங்களூருவிலும் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன், இருந்தாலும், சென்றதில்லை!



அந்த வாய்ப்பு ஹைதராபாத்தில் கிடைத்தது, அருமையா பொம்மைகள், கர்சுவடுகள், விண்வெளிப் பற்றி ஒரு காட்சி தெலுகுவிலும், ஆங்கிலத்திலும் பார்க்கலாம், அரை நாளை இங்கே தாராளமாகக் கழிக்கலாம், கூடவே ஒரு ஓவியக் கண்காட்சியும் உண்டு, மாடர்ன் ஆர்ட்ஸ், மற்றும் பாரம்பரிய ஓவியங்களும் அங்கே பார்க்கலாம்.

கோட்டி என்கிற இடத்தில், கொஞ்சம், ஷாபிங் கம்மியாக செய்ய விரும்புபவர்கள் செல்லலாம், புத்தகங்கள், பழங்கள், சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் அனேகமாக கிடைக்கும்.
மொத்தத்தில் எனக்கு மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு ஊர் ஹைதராபாத்.


இன்னும் பேசுவோம்
மதுர பொண்ணு





Saturday, January 26, 2013

கல்கி & குங்குமம்- விஸ்வருபம்- தமிழ்

தமிழை தேடிக் கொண்டே இருக்கிறேன், கொஞ்சம் குற்றஉணர்ச்சியோடு. இத்தனை நாட்களாக இல்லாத காதல் ஏன் என் மொழியின் மீது திரும்பவும், என்று....

அப்பொழுது தான் உணர்ந்தேன் என்றுமே அதீதமாய் காதலித்திருக்கிறேன் என் மொழியை

ட்விட்டறுக்கு நான் மிகவும் கடமை பட்டிருக்கிறேன், பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது, கருத்துப்பரிமாற்றம் நடக்கிறது, சிலர், நாம் பேசுவதை ஒப்புக்கொள்வார்கள், சிலர் மாற்றுக்கருத்து சொல்வார்கள், இரண்டுமே சுவாரஸ்யம் தான்...

பலத்தரப்பட்ட கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இணையம கொடுத்துள்ளது.சிலரின் அறிவைக் கண்டு வியப்பு, ஆச்சர்யம், கொஞ்சம் பொறாமையும் கூட, நான் விருதாவாக கழித்த காலங்களை இவர்கள் உபயோகமாக கழித்து அறிவை வளர்த்துக் கொண்டார்களே என்று.

போட்டிக்கு நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வருடம் மிகவும் இனிமையாக ஆரம்பித்தது. என் எழுத்து, என் கீச்சு,  முதல் முறையாக, குங்குமம் இதழிலில் வருடத்தின் முதல் நாள் வந்தது, என் பெயரை அச்சில் பார்த்து நான் சந்தோசம் கொள்ளாவிடில் நான் என்ன பெண்?!

உண்மையில், ஆத்மார்த்தமான சந்தோசம், திருப்தி!

இந்த வார, கல்கியில் என்னுடைய கீச்சு பிரசுரமாகியிருக்கிறது. கல்கி போன்ற தரம் உள்ள ஒரு இதழில், ஒரு சிறு பகுதியில் வந்தாலும் நான் மகிழ்ந்தது உண்மை...

இதை மேன்மேலும் வளர்க்க வேண்டும், அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்று தீராத, ஆவல் மனதில்.

பலரை என் எழுத்தின் மூலமாக அமைதி படுத்தும் முன், என்னை என் எழுத்தின் மூலமாக திருப்தி படுத்துவது கடினமாக இருக்கிறது. முயல்கிறேன்.

விஸ்வருபமே இந்த வார ட்விட்டரை ஆக்ரமித்தது, சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை, முதலில், இதை ஒரு படம் என்று பார்க்காமல், மதம் என்று பார்ப்பது சரியல்ல..

அதுவும், நாத்திகனான கமல், ஒரு மதத்தை அவமதித்து படம் எடுப்பது சாத்தியமில்லை.

ரஜினி அவர்களுக்கு சாதகமாக அமைந்த புகழ், கமல் போன்ற கலைஞனுக்குப் பாதகமாக அமைந்திருக்கிறது! சோகமான விஷயம்!

தமிழர்கள், தமிழனுக்கு உதவுவதில்லை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதன் உதாரணமே, தமிழகத்தில், ரஜினி முன்னணி நடிகராகவும், கமல் அவருக்கு அடுத்து வரும் நடிகராகவும் இருப்பது!

கன்னடதிலோ, தெலுகிலோ, இல்லை, மலையாளத்திலோ, ஒரு தமிழனை முன்னணி நடிகராக ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள் பார்க்கலாம்! அவர்கள், நம்மை போல் அதிகம் மொழிக் குறித்து பேசுவதில்லை, தங்கள் மொழியை,அவமதிப்பதில்லை

ஆனால், நாம் மொழி, மொழி என்று குதித்து விட்டு, கடைசியில், பிற மொழியினரை தலையில் தூக்கி வைத்து ஆடுவோம். இது சமீபமாக வரும், நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் பொருந்தும்.

இதை நான் மன வலியோடு தான் எழுதுகிறேன், இங்கே தமிழ் என் மூச்சு என்று பேசி ஓய்பவர்கள், பெரும்பாலும், தமிழை மதிக்காதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

ஒரு தமிழனாக, கமலின் திறமை மேல் அதிகம் மதிப்பு உண்டு.  ஆனால், தமிழக அரசு, விஸ்வருப பட விஷயத்தை,  தேவையில்லாமல், ஊதி பெரிதாக்கி விட்டார்கள் என்பதே நிஜம்.

அது கமலுக்கு நெகடிவ் புகழை தேடிக் கொடுத்தாலும் அது தான் நடந்திருக்கிறது.... கமலுக்கு இது புதிது அல்ல, மீண்டு வருவார் என்று நம்புவோம், காத்திருப்போம்.

இன்று குடியரசு தினம், எனக்கு கொண்டாட மனதில்லை, ஒவ்வொரு இருபத்திரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் இந்நாட்டில் பலாத்காரபடுத்தப் படுகிறாள்! கடந்த ஆண்டு, கொடூரமாக இறந்த ஜோதியை நாம் அதற்குள் மறந்து விட்டோம்!

காலம் வேகமாக ஓடுகிறது, காலத்திற்கு ஏற்ப, மனிதனும் ஓடிக் கொண்டிருக்கிறான், அந்த வேகத்தில், பல கொடூரங்கள், ஒதுக்கப்படுகின்றன, மறக்கப்படுகின்றன...

நம் நாட்டைப் பொறுத்த வரை, பெண்கள் மதிக்கப் படுவதில்லை, சீரழிக்கப் படுகிறார்கள்  என்பதை பட்டவர்த்தமாக உணர்ந்தேன்
அது வரையில் ---


மதுர பொண்ணு