Thursday, May 23, 2013

காலம் மாற்றி விடும் வலியை

காதலில் தோல்வியுற்ற பெண்கள் பல மாதங்களுக்கு பைத்தியம் போல இருப்பார்கள், பல காலம் ஹாஸ்டலில் இருந்ததால், இவ்வாறு அடி வாங்கிய பெண்கள் நடை பிணம் போல் இருப்பதை பார்த்திருக்கிறேன்....
ஆனால், பெரும்பாலும் அவர்கள் உணராதது இந்த கடின மன வலி காலப் போக்கில் குறையும் என்பது தான், ஒரு நாள் இதே போல் காதலில் தோல்வி அடைந்த ஒரு தோழிக்கு ஆறுதல் சொல்ல நேர்ந்தது, மிகவும் நல்ல பெண், அழகாகவும் இருப்பாள், டெல்லியை சேர்ந்தவள், ஆனால் அழகிலோ, அறிவிலோ கொஞ்சம் கூட கர்வமில்லாமல் சிரித்துக் கொண்டே பேசும் குணம் உடையவள்
இரண்டு மாதம் நன்கு பழகிய பிறகு கேட்டு அறிந்தது, காதலித்த பையன் இவளுடன் பழகிக் கொண்டே வேறு ஒரு பெண்ணிடமும் உறவாடிக் கொண்டிருந்தது, இவளுக்கு தெரியாமலே, அந்த பெண்ணை சந்தித்தது என்று.... கடைசியில் உண்மை ஒரு தோழியின் மூலமாக தெரிந்து இவள் நொந்து நூடில்ஸ் ஆனது தான் மிச்சம். அவளிடம் ஆறுதல் என்று நான் எதுவுமே சொல்லவில்லை
கொஞ்ச நாட்கள் பொறுத்திரு- என்று மட்டும் சொன்னேன், ஆனால் இல்ல இந்த துரோகத்த மறக்கவே முடியாது ப்ரதி என்று பலவாறு புலம்பினாள். ஒரு ஆறு மாதம் கழித்து இதைப் பற்றி உன்னுடன் பேசுகிறேன் என்று விட்டு அமைதியாகி விட்டேன்
ஹைதராபாத் விட்டு வர நேர்ந்தது, பல மாதங்கள் தொலைபேசி தொடர்பே இல்லை, ஜனவரி மாதம் ஒரு நாள் கால் செய்தாள், என்னவென்று கேட்டால், கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு, ஆனா டெல்லில , நீ கண்டிப்பா வரணும்ன்னு....
 உனக்கு சந்தோஷமா என்றேன், ரெம்ப பிடிச்சிருக்கு பையன, நல்ல வேல அவன் கிட்ட இருந்து தப்பிசிட்டேன் ப்ரதி, அவன கல்யாணம் பண்ணியிருந்தா, என்ன விட்டு வேற பொண்ண அப்போவும் பார்த்திருப்பான், இப்போ தான் நிம்மதியா இருக்கு என்றாள்!
அதனால், நொந்து நூடில்ஸ் ஆகி கண்ணீர் விடும் பெண்கள் ஆறு மாதம் பொறுத்திருங்கள்! காலம் மாற்றி விடும் வலியை....

Saturday, May 11, 2013

கற்பகசுமதி

கற்பகசுமதி

என் தோழி கற்பகசுமதி, ரெம்பவும் நெருங்கிய சிநேகிதி இல்லை, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பழக்கம்! என் அம்மாவுடன் ஆபிசில் வேலை செய்பவரின் பெண்! ரெண்டுபெரும் +2ல மதிப்பெண்கள் குறைவு. அதனால் அலைந்து திரிந்து மதுரையில் இருக்கும் அப்பொழுது பலருக்கும் தெரியாத கல்லூரியில் இடம் கிடைத்தது!

அதிலும் நான் எடுத்த மார்கிற்கு நான் பி காம் படிக்க மாட்டேன், பி பி ஏ தான் படிப்பேன் என்று நான் செய்த பிடிவாதம் வேறு! அவளும் அதே போல் தான், கற்பகசுமதி, ஆனால் என்னைவிட மதிப்பெண் அதிகம் !
இருவரின் மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் ஒன்றாகவே கல்லூரியில் கொடுத்து இருவருக்கும் ஒன்றாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது! பி பி ஏவிற்கு!
மிகவும் சந்தோஷமாக கல்லூரியில் சேர்ந்தேன்! பலரைப் போலவே.  கல்லூரி என்பது கனா காணும் காலம், சினிமாவிற்கு சென்று பாடத்தை குறைப்பதே கல்லூரி வாழ்க்கையின் நிஜம் என்று நானும் போலியாக நம்பியிருந்தேன்! நான் நிஜமென்று நினைத்தது சுத்த மடமை என சிறிது நாட்களிலேயே காலம் உணர்த்தியது! :-)

பள்ளிக்கூடத்தை விட மோசம்! தினமும் ஒரு டெஸ்ட், அதில் நல்ல மார்க் எடுக்காவிட்டால் நன்கு திட்டு விழும்! திட்டு, அறிவுரை  எல்லாம் இப்பொழுது போலவே அப்பொழுதும் எனக்கு வேப்பங்காய் தான்! பள்ளியிலேயே குட்டிச்சுவற்றில் ஏறிக் குதித்து முரளி நடித்த மனுநீதி படத்திற்கு துணிவாக சென்ற ஆள் நான், எனக்கெப்படி இந்த கல்லூரி பிடிக்கும்?,கல்லூரி வாழ்க்கையின் பால் நான் கொண்டிருந்த கனவு சுக்குநூறாக உடைந்து தெறித்தது!

ஆனால் என்னைப் போல் சுமதி எதற்கும் அலட்டிக் கொண்டதில்லை, அமைதியாக வருவாள், சுற்றுப்புறத்தை அருமையாக தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளத் தெரிந்த அருமையான பெண்! எதற்கும் கலங்கும் மனமும் கிடையாது, எல்லாவற்றையும் ஒரு புன்னகையில் சமாளிக்கும் திறமை, சில சமயங்களில் அதிகம் உணர்ச்சிவசப் படும் எனக்கு பொறாமையாகக் கூட இருக்கும்!

அவ்வுளவு தான், அதற்கு மேல், அவளிடம் பெரிதாக பேசியதில்லை, சேர்ந்தவுடன் அவள் ஒரு பெண்கள் அணியிலும், நான் வேறு ஒரு பெண்ணுடனும் நட்பு வைத்துக் கொண்டோம்! நன்றாகவே சென்றது வாழ்க்கை ! எங்கள் ஹெச் ஒ டி அமுதா மேம் அவர்களுக்கு பிடித்த மாணவியானேன்! நிஜமாகவே இன்றுவரை புரியாத புதிர், ஏனென்றால், தற்போது இருக்கும் என்னை விட பல மடங்கு கோபக்காரியாகவும் எடுத்தெறிந்து பேசுபவளாகவும் இருந்தேன்(இப்போ மட்டும் நீ கொரச்சலாவா பேசுற)ன்னு நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது! இதை விட மோசம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்!

நட்பு பெரியதாக இல்லாவிட்டாலும், பார்த்தால் ஒரு புன்னகை, ஒரு நல விசாரிப்பு என்று அன்பாக இருப்பாள், இதற்கிடையில் இப்பொழுது என் காவலனாகவும், பல சமயங்களில் எதிரியாகவும் இருக்கும் ஆங்கிலம் அப்பொழுதும் எதிரியாகவே இருந்தது, எங்கள் வகுப்பில் படித்த வாடிப்பட்டி, வடுகப்பட்டி பெண்களுக்கு ஆங்கிலம் அதிகம் கலக்கி பேசும் என்னைப் பிடிக்காமல் போய் விட்டது, அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை, ஏனென்றால் ட்விட்டரில் இப்பொழுதும் பலர் ஆங்கிலத்தை நான் ஒரு பந்தாவிற்காக பேசுவதாய் நினைக்கிறார்கள்!

நிஜமாய் சொல்ல வேண்டுமானால், எங்கள் பெங்களுரு கல்லூரி ஹாஸ்டல் அறை துடைக்கும் ஆயா என்னை விடஅழகாக ஆங்கிலம் பேசும்! ஆனால் இந்த நியாயத்தை புரியவைக்க என்னால் முடியவில்லை,

என்னையறியாமேலே என் ஆங்கிலப் புலமையால்(!!!!) எனக்கு பல  எனிமிகள் உருவாகிப் போனார்கள்! கூடிக்கூடி நம்மை பற்றி புரணி பேசுவது, நாம் கடந்து போகும் போது கிண்டல் செய்வது எனக் கொடுமை செய்தார்கள், வேறொரு பெண்ணென்றால் நிஜத்தில் உடைந்து போயிருக்க வாய்ப்பிருக்கிறது!

இந்த கிறுக்குப் பெண்களை சமாளிப்பதை கவனத்தில் கொண்ட நான், சுமதி வீட்டில் என்ன நடக்கிறதேன்பதை உணரவில்லை! எனக்கும் அக்கல்லூரியில் படிப்பதில் துளியும் இஷ்டமில்லை!

இப்படி சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், தெர்மோகோளை வைத்து ஒரு வித்தியாசமான டிசைன் செய்யச் சொன்னார்கள்! எனக்கு இந்த பைன் ஆர்ட்ஸ் எதுவுமே சிறுவயதில் இருந்து கை வந்ததில்லை, அதனால் நானே சுமதியின் துணையை நாடினேன்! வழக்கம் போல் ஒரு புன்னகையுடன் என்னுடன் சேர்ந்து அந்த டிசைன்னை செய்ய ஒப்புக் கொண்டாள்! எனக்கு  மகா சந்தோசம்!

இந்த வேலையில் ஒரு மூன்று நாட்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம் சுமதியும் நானும்! அழகாய் ஒரு குறை கூட சொல்ல முடியாத அளவில், என் சிறு சிறு உதவியினுடே செய்து முடித்தாள்! பெரியார் பேருந்து நிலையத்தில் ஒரு நாள், ஏழு மணியளவில் நிலக்கடலை வாங்கிக் கொடுத்தாள், சாப்பிட்டு அவளை பஸ் ஏற்றி அனுப்பியது இன்றும் நியாபகம் இருக்கிறது!

மறுநாள், கடைசி டிசைன் வேலையை முடிக்க வீட்டுக்கு வந்திருந்தாள்,  அப்பொழுது தான் அஜித் நடித்த வில்லன் படம் வெளிவந்திருந்தது, எனக்கு படம் பார்க்க மிகவும் ஆசை, ஆனால் சுமதிக்கோ என்னை போல் தனியாக தியேட்டர்ருக்குச் சென்றுப் பழக்கமில்லை! தயங்கியவளை கட்டாயப் படுத்தி இழுத்துச் சென்றேன்! நாங்கள் செல்லும் முன் இருபது நிமிட படம் முடிந்துவிட்டது!
இருந்தாலும் இருவரும் தனியாகச் சென்று படம் பார்த்த மகிழ்ச்சியில் இருந்ததால் படம் நன்றாகவே இருந்ததாக பட்டது எங்களுக்கு! மறுபடியும் அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்றேன்!

அதன் பிறகு என் படிப்பு, முதலியவற்றில் கவனமாய் இருந்ததால், அவள் குறித்து யோசித்ததில்லை, அவளும் முதலில் இருந்தது போலவே சிறு புன்னகையுடன் வளைய வந்தாள்

இதற்கிடையில் இந்த கல்லூரி பள்ளியை விட மோசம், எனக்கு மாப்பிள்ளை பாருங்கள் . இல்லாவிட்டால் வேறு கல்லூரியில் சேர்த்து விடுங்கள் அதுவும் இல்லைன்னா, படிப்பை நிறுத்துங்கள் என்று நான் வீட்டில் அடம் பிடிக்கத்தொடங்கினேன், ஆனால் அவளும் கல்லூரியில் இருந்து வீட்டுச்சூழலுக்காக விலகுவதாக இருந்தாள் என்பது தெரியாது, இரண்டாவது செமெஸ்டர் முடிக்கும் தருவாயில் ஏன் கல்லூரியில் இருந்து விலகுகிறாய்  வருந்தி கேட்ட எங்கள் அமுதா மேம்மிடம் வீட்டு நிதி நிலைமை சரியில்லை, அதனால் படிப்பை நிறுத்தகிறேன் என்று எல்லோர் முன்பும் சிரித்துக் கொண்டே சொன்னாள்!

எனக்குக் கூட, படிப்பை நிறுத்துவதைப் பற்றி இவ்வளவு சுலபமாக சொல்கிறாளே, நாளை படிக்காவிட்டால் இதே நிதி நிலைமை இவளுக்கும் வருமே என்று யோசித்தது இன்றும் நியாபகம் இருக்கிறது!

எனக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தது, சுமதி அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பிரவுசிங் சென்டரில் வேலை செய்யத் தொடங்கினாள்! அவளைப் பற்றி யோசிக்கக் கூட நேரமில்லாமல், என் எம் பி ஏ , என் கனவுகள் என நாட்கள் கடந்து  சென்றது!

இதற்கிடையில் எம் பி ஏ படிக்க நான் பெங்களூருக்கு சென்று என் படிப்பை தொடர்ந்த காலம் , அம்மா தொடர்ந்து சுமதியைப் பற்றி பேசுவார்கள், அருமையான பெண், அவளின் முதலாளி, இப்பெண்ணின் குணத்தைப் பார்த்து இவளின் குடும்ப சூழ்நிலை உணர்ந்து பல உதவிகள் செய்வதாக சொல்வார்கள்! எனக்கு சந்தோஷமாக இருக்கும், தான் செய்யும் வேலையில் சிறப்பாக இருக்கிறாளே என்று!

சிறுவயதில் இருந்து நோய், மஞ்சள் காமாலை போல் அவ்வபோது வந்திருக்கும் போல, பிட்ஸ் வேறு! சிறு சிறு சிகிச்சைகள் செய்து இருக்கிறார்கள், பெரியதாக எதுவும் இருப்பதாக டாக்டரும் சொல்லவில்லை! ஆனால் திடீரென்று ஒரு நாள் இரண்டு கிட்னியும் இயங்கவில்லை, கண் போகும் வாய்ப்பு அதிகம், பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று சொல்லிவிட்டார்கள்

ஏற்கனவே கடனில்இருக்கும் அப்பா என்ன செய்வார், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் அம்மா, படுக்கையில் விழும் வரை, அதாவது கண் பார்வை முழுவதும் மங்கும் வரை வேலை செய்தாள் அந்த பெண் என்றாள் நம்புவீர்களா?

நான் வாழ்கைய தைரியமா எதிர்கொள்வேன், சாவைப் பற்றி பயம் இல்ல, சாவு என்னப்பார்த்து பயப்படணும்" என்று கண் போன பின்பு ஒருநாள் சொன்னாளாம்!

நான் மதுரைக்கு அடிக்கடி வந்தும் அவளைச் சென்றுப்பார்க்க வில்லை! மனது இடம் கொடுக்கவில்லை! என் நியாபகத்தில் எனக்கு கடலை வாங்கி கொடுத்த சிரித்த முகக்காரி இருக்கவேண்டுமென விரும்பினேன்
கணேஷன் அங்கிள் மனதில் கூட இருந்திருக்கும், கூட படித்த பெண் ஒரு முறை வந்து பார்த்திருக்கலாமே என்று! மனம் வரவில்லை!

அன்று ஒரு நாள், வேலையில் சேர்ந்த புதிது, பெங்களூரில் இருந்து மதுரை வந்திருந்தேன், சுமதி இறந்து விட்டதாக தகவல் வந்தது!
அம்மாவிடம் வரவா அம்மா என்றேன்!..... என் அம்மா யோசித்துவிட்டு "வேண்டாம் அவள இப்போ பார்த்தா உன்னால தாங்க முடியாது" என்றுவிட்டு தனியாகவே சென்றார்!

இதில் கொடுமை என்னவென்றால், பணத்தை எல்லாம் மகள் வைத்தியத்திற்கு செலவழித்துவிட்டு, சுமதியின் பெற்றோரிடம்  அவளின் இறுதி காரியத்திற்கு பணமே சுத்தமாக இல்லை!  அம்மா வேகமாக சென்று அவர்களால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள்
ஆனால் அம்மாவிற்கு முன்பே, அவள் வேலை செய்த ப்ரோசிங் சென்டர் முதலாளி பணம் கொடுத்து இறுதி காரியம் அனைத்தையும் கவனித்துக் கொண்டதாக அம்மா என்னிடம் புலம்பினார்கள்

"அப்படி அழுதார்டி சுமதி முதலாளி, என் பொண்ணு மாதிரி மா, அம்மா அப்பாவிற்கு கஷ்டம் கொடுக்க கூடாதின்னு அப்படி உழைக்கும் இந்த பொண்ணு, வேலையில ஒரு குறை சொல்லமுடியாது, உயிரோட இருந்திருந்தா கல்யாணம் காட்சி பார்த்திருக்கலாமே, ஆண்டவன் நல்ல திறமை, அழகு, பொறுமை எல்லாம் கொடுத்தான், ஆயுள மட்டும் கொடுக்கலையேன்னு" அழுதார் அம்முன்னு சொன்ன என் அம்மாவின் கண்களிலும் கண்ணீர்

சமீபத்தில் வில்லன் படம் டிவியில் ஒளிபரப்பினார்கள், சுமதியும் நானும் மிகத் தாமதமாக தியேட்டர்ரில் நுழைந்தது என் கண் முன்னே நிழல்படமாக ஓடியது

ஆனால் இன்றளவும் என் மனதில் சிரித்த முகமாக, கவலை படாத ப்ரதிபா, அழகா டிசைன்ன முடிச்சிடலாம் என்று சொன்ன பெண்ணே வியாபித்திருக்கிறாள்!