Wednesday, July 3, 2013
இரவு - என் முதல் தமிழ் சிறுகதை!
கன்னத்தில் அப்பாவின் இரண்டாவது மனைவி அடித்தது இன்னும் வலித்தது,திரைப்படங்களில் பார்த்த போது சிரிப்பு வந்த, சித்தி கொடுமை இரண்டு வருடங்களுக்கு முன்பு நிஜமாக கண் முன் வலம்வரத் தொடங்கியது. சித்தி ஒரு நவீன கால ஹிட்லர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம், அப்பாவின் வாய் சமுதாயம் என்கிற போர்வையில் அடங்கிப் போனது, இல்லை தலையணை மந்திரமோ? ஆராய்ச்சி செய்ய மகி விருப்பப்படவில்லை! சினிமாவில் வரும் பாவப்பட்ட பெண்ணைப் போல் அடங்கி போகாமல் இவள் எதிர்ப்பது தான் சித்தியின் இன்றைய கோபத்தின் காரணம். அப்பாவும் வீட்டில் இல்லை, இருந்தால், அடிக்கும் வரை விட மாட்டார், வாக்குவாதம் முற்றி இவளும் பேச வாய் திறந்த போது பொறுக்காத சித்தி தன் கை வண்ணத்தை மகியின் கன்னத்தில் காட்டினாள்!
என்றுமே இல்லாமல், இன்று பார்த்து மழை பேரிடியுடன் பெய்யத் தொடங்கியது!கோபத்துடன் வீட்டில் இருந்து இறங்கி தெருவில் நடக்கத் தொடங்கினாள் மகி! எங்கே போகிறோம் என்று உணராமல் வெகு தூரம் நடந்த பிறகு தான் சுற்றுப் புறத்தை திரும்பி பார்த்தவளுக்கு மனதில் திகில் சூழ்ந்தது! யாருமே இல்லாத காடு போல் தோற்றமளித்த இந்த இடத்திற்கு எப்படி வந்தோம் என்று யோசித்தாள், மனதில் உள்ள கோபம் இவ்வுளவு தூரம் சுயநினைவு சுற்றுப்புறம் மறந்து இழுத்து வந்திருக்கிறது. வழியும் தெரியாமல் எப்படி வீட்டிற்கு செல்வது என்று குழப்பத்தில் நின்ற போது நிஜமாகவே மனதில் பயம் சூழ்ந்தது.
அசைந்த மரங்கள் பேய்களாய் உருவெடுத்துதிகிலடையச் செய்தன, காற்றுவேறு பலத்த ஓசையுடன் உடலுக்குள் ஊடுருவியது! சாதாரணமாய் ரசிக்கும் மழை இன்றுகுளிருடன் அதீதமான சில்லிப்பை உடலில் புகுத்தியது!
நடுக்கத்துடன் திரும்பி பார்த்த மகி பயந்தே போனாள், ஒரு உருவம் இவளை நோக்கி வந்து கொண்டிருந்தது, பேய் கதைகளைகேட்டு அநியாயமாய் சிரித்தது தப்போ என்று இப்பொழுது தோன்றியது, நெருங்கி வர வர தான் அது ஒரு ஆண் என்று விளங்கியது, ஒரு வேலை ஆண் பேயோ, ஆனால் கால் இருப்பது போல தோணுதே என்று உற்றுப் பார்த்தாள், மனிதன் தான் என்று உறுதியானதும் பயம் குறையவில்லை, நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்கள் குறைவா என்ன? ஒரு நடுக்காட்டில் நடுங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை நடுங்க வைக்க....
அருகில் வந்த அவன்,'" இந்த மழைல இங்க என்ன செய்ற? எதுக்கு இந்த பக்கம் வந்த” என்றான்
"நா..நான் சும்மா இந்த பக்கம் வந்தேன்" என்றாள் குழப்பத்துடன்..
“என்னது, ச்சும்மா வந்தியா, நாசமா போச்சு, , இது யாரும் இல்லாத அத்துவானம், இங்க வந்து சும்மா வந்தேன், டான்ஸ் ஆடிட்டு வந்தேன்ன்னு சொல்லக்கூடாது, யாரும் இல்லாத இடத்துக்கு உன்ன தூக்கிட்டு போய்ட்டா என்ன செய்வ?
"இல்ல யோசிக்கல, வேற யோசிசிட்டே வந்தேன், வழிய கவனிக்கல" என்று தடுமாறி உரைத்தாள்
"அது சரி, நல்லா இருக்கீங்க பொண்ணுங்க, இதுல பசங்கள குறை சொல்லுறது, அவன் பார்த்தான், இவன் கற்பழிச்சான்ன்னு, இப்படி தனியா வந்தா என்ன தான் நடக்காது? என்று கோபத்துடனும் ஒரு வித பதைப்புடனும் பேசியவனின் முகத்தில் ஒரு குத்து விடலாமா என்று தோன்றியது மகிக்கு!
"ஏங்க,ஒரு பொண்ணு தனியா வந்தா உடனே கற்பழிப்பா, அப்போ நாங்க என்ன மனுஷன்களே கிடையாதா, நடக்கக் கூட கூடாதா, ஏதோ யோசிச்சிட்டு இந்த பக்கம் வந்திட்டேன், இந்த லட்சனத்தில தான் உங்க அப்பா அம்மா உங்கள வளர்த்து வச்சி இருக்காங்க" என்றாள் உஷ்ணத்துடன்
“க்கும், எங்க அப்பா அம்மா வளர்க்கிறது இருக்கட்டும், இப்படி பேய் மழையில் தனியா வரலாமா? பேய் பத்தின பயம் எல்லாம் இல்லையா? என்று சிரிப்புடன் கேட்டான்
அதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்,” ஏன் சிரிக்கிற? என்று யோசனையுடன் கேட்டவனிடம்
“பேயா?! சார், இங்க அறிவியல் உலகத்தில பேய் கூட இருக்க முடியமா என்ன, இப்படி நல்லா ஓங்கு தாங்கா இருக்கீங்க, சின்ன புள்ள மாதிரி பேய பத்தி பேசுறீங்க” என்று மேலும் சிரித்தாள்
அவனின் உருவத்தையும், அவனின் பேய் நம்பிக்கையையும் பார்த்து அவளுக்கு மேலும் மேலும் சிரிப்பு பொங்கியது. நல்ல வேல, நம்ம பொண்ணா இருந்தாலும் இவனை விட தைரியமா தான் இருக்கோம் என்று தனக்கே ஷெட்டு கொடுத்துக் கொண்டாள்
அவனிடம் ஒரு நிமிடம் பதில் இல்லை
“பேய் பத்தின பயம் வேணும்ன்னா இல்லாம இருக்கலாம், ஆனா மனித பேய்களைப் பத்தி உன் வயசு பொண்ணுங்க தனியா வரும் போது கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும், இனிமே இப்படி வராத, இன்னைக்கு நான் வந்த மாதிரி யாரும் வர மாட்டாங்க, ஆபத்து வரலாம்”
சிரிப்பாய் வந்தாலும், நம் நன்மைக்காக தானே சொல்கிறான் என்று நினைத்து.” சரி சார், இனிமே இப்படி வரல” என்றாள்
பலத்த மழை என்பதால், நடக்கும் வழியில் தெரு விளக்கு கூட இல்லை, எங்கும் இருட்டாகவே இருந்தது, அருகில் நிற்பவனின் உருவம் தெரிந்ததே தவிர முகம் தெரியவில்லை. உதவி செய்பவனின் முகம் பார்க்க வேண்டும் போல் தோன்றியது!
இவள் பேசினால் மட்டுமே அவன் பேசினான், மற்றபடி நடைபயணம் மௌனமாகவே தொடர்ந்தது, தூரத்தில் ஒரு தெருவின் விளக்கு எரிந்தது!
“இங்க இருந்து நீ போய்டுவ இல்லையா, அங்க வெளிச்சம் தெரியுது பாரு, அங்க இருந்து வழி உங்க வீட்டுக்கு தெரியும் தான, இதுக்கு மேல நான் வர முடியாது” என்றான்
“ஏன் சார், உங்க வீட்டுக்கு நீங்க போக வேண்டாமா? நீங்க எந்த ஏரியால இருக்கீங்க, அப்பா வந்திருப்பாரு சார், வீட்டுக்கு வாங்க, ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்” என்றாள்
“நிஜத்தில் அடி வாங்கி கோபத்தில் வீட்டின் வெளியே ஓடி வந்ததால், இவனை உடன் அழைத்து சென்றால்,வரவேற்பு எப்படி இருக்கும் என்று அவளுக்கு தோன்ற தான் செய்தது, ஆனால் அப்பா வீட்டிற்கு வந்திருப்பார் என்பதால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அழைத்தாள்.
“இல்ல மகாலட்சுமி, நான் இனிமே உன் கூட வர முடியாது, என் நண்பர்கள் என்ன தேடுவாங்க, அவங்க உன்ன தேடி வரக் கூடதின்னு தான் நான் உன் கூட வந்தேன்” என்றவன் குரலில் சோகம் இருந்தது
“அவங்க ஏன் சார், என்ன தேடனும், சரி சார், அடுத்த முறை கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, கற்பூரம் நகர், வீட்டின் முன்ன பிள்ளையார் சிலை இருக்கும், சின்னதா” என்றவளை ஒரு நிமிடம் ஆழப் பார்த்து விட்டு
“சரி வரேன், ஆனா நீ இப்போ சீக்கிரமா வீட்டுக்கு போ, நீ வீட்டுக்கு போனால் தான் நான் நிம்மதியா போக முடியும், சீக்கிரம் போ” என்று துரத்தினான்
“சரி சார், போயிட்டு வரேன், என்று திரும்பியவள்..ஏதோ யோசனையில் மெல்லவே தான் நடந்தாள்,”மகி என்று அவன் அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தவளிடம்
“என் பெயர் என்னன்னு நீ கேட்கவே இல்லையே? என்றான் குரலில் ஒரு பேதத்துடன்
தன்னையே ஒரு முறை திட்டுக் கொண்டு “சாரி, உங்க பேர் என்ன? என்றவளிடம்
“என் பேர் நந்தன், எப்போதும் மறந்திராத” என்று மட்டும் சொல்லி விட்டு விறு விறுவென்று இருட்டில் சென்று மறைந்து விட்டான்
யோசனையுடன் மெல்ல நடந்த மகிக்கு என்னமோ செய்தது, இவ்வுளவு தூரம் வந்து பேசிய இளைஞனிடம் ஏதோ ஒன்று அவளை இழுத்தது, மேலும் அவளை அவன் பெயர் சொல்லி அழைத்தது வேறு குழப்பியது, ஒரு வேலை அப்பாவிற்கு தெரிந்தவனாய் இருப்பானோ, அதனால் தான் என் பெயர் தெரிந்திருக்குமோ என்று மனம் குழம்பியது!
அடுத்து அவனை எப்போது பார்க்க போகிறோமோ என்று யோசனை தோன்றி ஒரு வித குழப்பத்திலேயே வீட்டிற்குள் சென்றாள்.
வாசலில் காலடி எடுத்து வைக்கும் போதே, சித்தி அப்பாவிடம் பேசியது கேட்டது,” உங்க பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க, அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போகாது, ஏற்கனவே ஒரு பையன் கேட்டு வந்தான், உங்க பொண்ணு நேரம், கேட்டு வந்த இரண்டு நாள்லயே அவனும் விபத்துல போய்ட்டான், என்னத்த சொல்ல” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்
மெளனமாக வீட்டிற்குள் சென்று தன் அறைக் கதவை அடைத்ததாள் மகி, என்னவோ குழப்பமாகவே இருந்தது.அன்றைய இரவு உறக்கம் இன்றி நகர்ந்தது!
மறுநாள் ஞாயிறு என்பதால் அப்பா வீட்டில் இருந்தார், சித்தி கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி சென்றிருந்ததால், அப்பாவும் மகளும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
மெதுவாக அவரிடம் சென்று,” அப்பா, என்ன பொண்ணு கேட்டு ஒரு பையன் வந்திருந்தான்ன்னு நேத்து சித்தி பேசிட்டு இருந்தாங்களே, யாருப்பா அது” என்றாள்
சிறிது நேரம் யோசித்து விட்டு,” அது ஒன்னும் இல்லமா, ரெம்ப நாள் முன்னாடி நடந்தது, இப்போ அது பற்றி என்ன” என்றார்
“இல்ல பா, தயவு செஞ்சு சொல்லுங்க, அந்த பையனுக்கு என்ன ஆச்சு? என்று ஒரு பதைபதைப்புடன் கேட்டாள்.
ஒரு முடிவுக்கு வந்தவர் போல,” உன்ன ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பையன் பொண்ணு கேட்டு வந்தான் டா, பார்க்க அழகா இருந்தான், இங்க தான் ரெண்டு தெரு தள்ளி வீடு, ஒரு மூணு கிலோமீட்டர் தள்ளி சிமென்ட் ஆலை இருக்கே, அதுல அவன் சிவில் எஞ்சினியர்ரா இருந்தான், நானும் உனக்கு இங்க இருந்து விடுதலையா இருக்குமேன்னு சரின்னு சொல்லிட்டேன், ஆனா ஒரு மழை நாளில் நைட் இன்ஸ்பேக்ஷனின் போது கால் தடுமாறி எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்திட்டான், நான் கூட கடைசி காரியத்துக்கு போய்ட்டு வந்தேன், அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன், உன்ன ஒரு வருஷமா காதலிச்சதா சொன்னான், அவங்க அப்பா அம்மா கிட்டயும் சம்மதம் வாங்கிட்டதாகவும், முதலில் என் சம்மதம் கிடைச்சதும், அவங்க வந்து பேசுவாங்கன்னும் சொன்னான், அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு, அதான்டா உன் சித்தி காரி நேத்து பேசிட்டு இருந்தா, நான் உன் கிட்ட சொல்லாமலே மறைச்சு வச்சிடலாம்ன்னு தான் நினைச்சேன்,நேத்து அவ பேசி உன் காதில் விழுக வச்சிட்டா,நீ இத பத்தி எல்லாம் யோசிக்காத மகி, அவங்கவங்க விதி, யார விட்டது, நீ போய் ரெஸ்ட் எடு” என்றார்
மெல்ல எழுத்து தன் அறைக்கு செல்லும் முன் திரும்பி,” அப்பா, அந்த பையனோட பேர் என்ன? என்றாள்
“அவன் பேரு நந்தன் டா, அத பத்தி யோசிக்காத மகி, கஷ்டமா இருக்கும், ஏதாவது டிவில படம் போட்டு பாரு என்றவர், தானே டிவியை ஆன் செய்து பார்க்கலானார்
தன் தனியறையில் சென்று அமர்ந்த மகிக்கு ஒன்று மட்டும் புரிந்தது, இன்று மறுபடியும் அந்த சிமென்ட் ஆலைக்கு தான் செல்வோம் என்று.......................
Subscribe to:
Post Comments (Atom)
உன் முயற்சிக்கு என் பாராட்டுகள் !!!! Srini Kellys
ReplyDeleteஅழகான கதை ... வாழ்த்துக்கள் !**
ReplyDeleteநன்றி தோழரே :)
DeleteGood one.. I liked it :)
ReplyDeleteநன்றி :-))
DeleteKathai Nalla irunthathu...nandhan appdingra peyar arumai. @amsa_krish
ReplyDeleteநன்றி அம்சா, பெருமாளின் காதலி நான், அதனால் நந்தன் :-))
Deleteஅடடே... நல்ல திகில் கதை டச் இருக்கு... வாழ்த்துக்கள்... :-))
ReplyDeleteஆக, பேய் இருக்குனு சொல்றீங்க ? ரைட்டு ...
ReplyDeleteSuper!, Hi-five! keep it up. Deliver more such short-stories
ReplyDeleteநல்ல விவரிப்பு, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்
ReplyDeleteகண்டிப்பா கதிர், நன்றி :-)
DeleteWOW. Prathi...i LOVED it. so sad :/ would love to read an elaborate novel version of this. keep it up!
ReplyDeleteThank you baby, will make it a positive ending in the novel :)
Deletenice touch... ithuvum oru kadhal thanooo ? :)
ReplyDeleteNice story...congrats..
ReplyDelete